2026 பிப்ரவரி மாதம் முதல் இதுவரை வணிக சிலிண்டர் விலை ரூ.1380 உயர்ந்துள்ளது. இது கடந்த 3 மாதங்களில் இது 81% உயர்வாகும். இந்த விலையேற்றம் வணிகர்கள் மட்டுமின்றி, மக்களுக்கும் பெரும் சுமையாக மாறும் என ராகல் காந்தி தெரிவித்துள்ளாா்.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றம் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் மாதந்தோறும் திருத்தப்படுகின்றன.
இந்த நிலையில், மாதத்தின் முதல் நாளான இன்று நாடு முழுவதும் வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. குறிப்பாக, சென்னை நகரில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.993 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.3,237 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளதால், சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தேநீர் கடைகள், ஹோட்டல்கள், தாபாக்கள், பேக்கரிகள், இனிப்பு கடைகள் உள்ளிட்ட பல துறைகளில் செலவு அதிகரித்து, அதன் தாக்கம் இறுதியில் பொதுமக்களின் அன்றாட உணவுச் செலவிலும் பிரதிபலிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
இதற்கிடையில், 3 மாதங்களில் வணிக கேஸ் விலை 81 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளாா். இதுதொடர்பாக அவர் தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”தேர்தலுக்கு பிறகு பணவீக்கம் அதிகரிக்கும் என்று முன்கூட்டியே எச்சரித்ததாகவும், தற்போது அதுவே நிகழ்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிப்ரவரி மாதம் முதல் இதுவரை வணிக கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,380 உயர்ந்துள்ளதாகவும், வெறும் மூன்று மாதங்களில் 81 சதவீதம் வரை உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விலை உயர்வு முதலில் கேஸ் சிலிண்டரில் தொடங்கி, பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளாா்.
