
ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் சந்திப்பு வெறும் ஒரு நாள் பரபரப்பு மட்டும் தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நேற்று அரசு விழாவாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அந்தவகையில் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையனும் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு ஒரே காரிலேயே பயணித்தனர். அத்துடன் தேவர் நினைவிடத்தில் இருவருடனும் , அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் இணைந்துகொண்டார். மூவருமாக முத்துராமலிங்கத் தேவர் படத்திற்கு தீபாராதனை காட்டி வழிபட்டு மரியாதை செலுத்தினர். மூவரின் சந்திப்பும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.
இந்த நிலையில் மூன்று தலைவர்களின் சந்திப்பு , ஒரு நாள் பரபரப்பு மட்டும் தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இன்று சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளையொட்டி அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் கூட்டாக இணைந்து அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
பின்னர் நெல்லை பாஜக மாவட்ட அலுவலகத்தில் நயினார் நாகேந்திரனுடன் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். அதன்பின்னர் செய்தியாளர்களாஇ சந்தித்த ஆர்.பி.உதயகுமாரிடம், ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “ஒரு நாள் பரபரப்பு அது. நீங்கள் அதை கூடுதல் பரபரப்பு பண்ணாமல் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும். இது எந்த பின்னடைவையும் ஏற்படுத்தாது. இது ஒன்றும் புதிதல்ல” என்று கூறினார்.


