மக்களுக்காகவே உழைக்க தயாராக இருக்கும் திராவிட மாடல் அரசை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சென்னை வருவாய் மாவட்டத்தை சேர்ந்த 2007 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்று, பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எள்.ஆர். ராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
வீடு எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு வீட்டிற்கான பட்டாவும் முக்கியம் என்பதால் அரசு விரைந்து வீட்டு பட்டாக்களை வழங்கி வருகிறது என்றார். சென்னையில் பட்டா கிடைக்காமல் இருக்கும் மக்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் பட்டா வழங்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதி அளித்திருந்ததை குறிப்பிட்ட அவர், தேர்தல் முடிந்த நிலையில் இப்போது விரைந்து பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.
வீட்டிற்கான பட்டா என்பது ஒவ்வொருவருடைய உரிமை என்று கூறிய உதயநிதி, சென்னையில் மொத்தம் 28,848 பட்டாக்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
திமுக அரசு முன்னெடுத்த,
காலை உணவு திட்டத்தை வெளி மாநிலங்களும் வெளிநாடுகளும் பின்பற்றுகின்றன என்றும் காலை உணவு திட்டத்தால் 20 லட்சம் குழந்தைகள் பயன் பெறுகின்றனர் என்றும் கூறினார்.
திராவிட மாடல் அரசு மக்களுக்காகவே உழைக்க தயாராக இருக்கிறது என பேசிய அமைச்சர் உதயநிதி, திராவிட மாடல் அரசை, மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.