சனாதன விவகாரம்- உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு
சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்புலம் பற்றி சிபிஐ விசாரிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு கலந்துகொண்ட நிலையில், அவர்களுக்கு எதிராக ஜெகன்நாத் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி, சிலவற்றை எதிர்க்க முடியாது, ஒழித்துதான் ஆக வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
சனாதன மாநாட்டில் உதயநிதி பேசியது நாடு முழுவதும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பங்கேற்றது அரசமைப்பு சாசனத்திற்கு முரணானது. சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்னணியை கண்டறிய சிபிஐ விசாரணை தேவை. கூட்டத்தின் பின்புலமாக யார் உள்ளனர் என்பது குறுத்து விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சனாதனத்துக்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை அன்று நீதிமன்ற அலுவல் நேரத்தில் காலையில் முறையிட அறிவுருத்தப்பட்டுள்ளது.