சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விருப்பமில்லை என மருத்துவர்களிடம் கூறியதே ஜெயலலிதா தான் என சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட பின் சசிகலா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கூறிய அவர், “சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விருப்பமில்லை என மருத்துவர்களிடம் கூறியதே ஜெயலலிதா தான். சென்னையே மருத்துவத் தலைநகரம்தான். அதனால் வெளிநாடு செல்ல வேண்டாம் என ஜெயலலிதா கூறினார். 2016 டிசம்பர் 19 ஆம் தேதி ஜெயலலிதாவை டிஸ்சார்ஜ் செய்யும் நடைமுறையை செய்தோம்.

எய்ம்ஸ், அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விரிவான விளக்கம் அளித்துள்ளனர். ஆறுமுகசாமி ஆணையத்தில் எனது தரப்பு விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக தந்துள்ளேன். அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், ஓபிஎஸ், ஈபிஎஸ் மாறி மாறி ஒருவருக்கொருவர் விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். நான் யார் பக்கமும் இல்லை. அனைவருக்கும் பொதுவான நபராகவே செயல்படுகிறேன். அதிமுகவில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியை தொடங்கிவிட்டேன். விரைவில் அனைவரும் ஒன்றிணைவார்கள்” எனக் கூறினார்.
