கரூர் சம்பவம் தொடர்பாக தவெக உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீது தமிழ்நாடு அரசு விரிவான பிரமான பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரையில் ஈடுபட்டபோது, அங்கு திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி எஸ்.ஐ.டியும் விசாரணையை தொடங்கியுள்ளது. அதேநேரம் இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் என தவெக வலியுறுத்தி வருகிறது. ஆகையால் எஸ்.ஐ.டி விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் தந்தை தொடர்ந்த வழக்கு, SIT விசாரணைக்கு எதிரான மனு, சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் ஜே.கே. மஹேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு மனுக்களை விசாரிக்கிறது. த.வெ.க. தரப்பு வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் , தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, அபிஷேக் சிங்வி உள்ளிட்டோர் ஆஜராகினர். அப்போது உயிரிழந்த சிறுவன் பிரித்திக் தந்தை தரப்பில், “கரூர் கூட்ட நெரிசலில் தான் தன்னுடைய மகனை இழந்துள்ளேன். பாதிக்கப்பட்டவன் என்ற அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பான உண்மையான நிலவரம் வெளிவர வேண்டும். அதனால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். தமிழ்நாட்டு அதிகாரிகளை வைத்து விசாரித்தால் நிச்சயமாக நியாயமான முறையில் விசாரணை நடைபெறாது” என்று வாதிடப்பட்டது.
அதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி, “உயிரிழந்த சிறுவனின் தந்தையினுடைய வலி எங்களுக்கு புரிகிறது. அதேவேளையில் இந்த விவகாரத்தை பொருத்தவரைக்கும் தமிழ்நாடு அரசு சிறப்பு விசாரணை குழு அதிகாரியை நியமிக்கவில்லை, மாறாக உயர் நீதிமன்றம் தான் நியமித்தது. “அஸ்ரா கர்க்” என்ற மூத்த அதிகாரி தான் சிறப்பு விசாரணை குழுவினுடைய அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். அவர் சி.பி.ஐ போன்ற மத்திய விசாரணை அமைப்புகளில் பணியாற்றியவர். அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ விசாரணைக்கு அனுப்பக்கூடாது. அரிய வழக்குகளை மட்டுமே சூழ்நிலைகளுக்கு ஏற்ப பரிந்துரைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஏற்கனவே வழங்கிய தீர்ப்பு உள்ளது.
அதேபோல இந்த சம்பவம் நடைபெற்ற உடனாக துரிதமாக அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணைய விசாரணையும் விரைந்து நடைபெற்று வருகிறது. சிறுவனின் தந்தை உயர் நீதிமன்றத்தை அணுகவில்லை. வேறு நபர் தொடர்ந்த வழக்கில்தான் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது உயர் நீதிமன்றம் திறமையான அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. எனவே சி.பி.ஐ விசாரணை தேவை இல்லை.” என்று பதிலளித்தார்.
அப்போது பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை தரப்பில், “சம்பவம் நடைபெற்று என்னுடைய மகன் இறந்த தருவாயில் நான் முதலில் அவனுடைய இறுதிச் சடங்குகளை தான் நடத்தினேன். ஆனால் அரசு தரப்பு கூறுகிறது முதலில் உயர் நீதிமன்றத்தை தான் ஏன் அணுகவில்லை என்று. இந்த வாதம் அவர்கள் நெஞ்சில் ஈரம் இல்லாமல் செய்யும் வாதம். நாங்கள் உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணை குழுவை குற்றம் கூற விரும்பவில்லை. மாறாக அவர்கள் அமைத்திருக்கக்கூடிய அதிகாரி தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்தவர். ஆனால் இந்த விவகாரத்தில் உண்மை நிலை வெளிவர வேண்டும் என்றால் பொதுவான ஒரு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும். அதனால் தான் சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை வைக்கிறோம்” என்று தெரிவித்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசு தரப்பில் விரிவான பிரமான பத்திரம் தாக்கல் செய்ய அனுமதி அளித்தது. அத்துடன் பிரமான பத்திரத்தை பார்த்த பின்னர்தான் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.