கீழடி அருங்காட்சியகத்தை காண மாணவர்கள் படையெடுப்பு
கீழடியில் அமைக்கப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை காண பள்ளி, கல்லூரி மாணவர்கள் படையெடுத்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு நடைபெற்ற பகுதியில் தொல்லியல் துறை சார்பில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் செட்டிநாட்டு கட்டிட கலை வடிவில், 18 கோடியே 41 லட்ச ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. இதனை கடந்த ஞாயிறு அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை காண பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
அருங்காட்சியகத்தில் உள்ள ஆறு கட்டிட தொகுதிகளிலும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மண்பானைகள், பானை ஓடுகள், நெசவு தொழிலில் பயன்படுத்தப்படும் தக்கழி, நெசவு குண்டு, தமிழ் பிராமி எழுத்துகள், இருவண்ண பானைகள், வெளிநாட்டு பாணி மண்பாண்ட பொருட்கள் உள்ளிட்டவற்றை மாணவ, மாணவியர்கள் பிரமிப்புடன் கண்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அருங்காட்சியகத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் செட்டி நாட்டு உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.