தான் தெரிவித்த கருத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகையை கட்சியை விட்டு நீக்கக்கோரி ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொது செயலாளர் ஜெய்சங்கர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, எந்த ஒரு ஆதாரங்களும் இல்லாமல் தன்னைக் குறித்து பொய் செய்தி வெளியிட்டதாக கூறி 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கோரியும் அவதூறு கருத்துக்கு மன்னிப்பு கேட்க கோரியும் ஜெய்சங்கருக்கு செல்வ பெருந்தகை தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த நோட்டீசுக்கு பதில் அளிக்கும் வகையில் ஜெய்சங்கர் தரப்பில் பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கண்டனம் தெரிவித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதை தொடர்ந்தே அவருக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அஸ்வதாமனும், செல்வப்பெருந்தகையும் ஆம்ஸ்ட்ராங் வீட்டு நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்று வந்ததாகவும் இருவருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும் இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.