2026-ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காக, இருப்பிடச் சான்றிதழ் பெறுவதற்கான ஆன்லைன் (ஈ-சேவை) நடைமுறைக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது என கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிர்வாக ஆணையர் அமுதா தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, வரைவு பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் கணக்கெடுப்புப் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் வாக்காளர்களுக்கு, உரிய ஆவணங்களை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வாக்காளர்களுக்கு தேவையான ஆவணங்களை எளிதாகப் பெற வசதியாக, 2025 டிசம்பர் 26 முதல் 2026 ஜனவரி 25 வரை, அந்தந்த மண்டல துணை வட்டாட்சியர்கள் மற்றும் தாலுகா தலைமையிடத்து துணை வட்டாட்சியர்கள், இருப்பிடச் சான்றிதழை (Nativity Certificate) கையால் வழங்க அதிகாரம் அளிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிர்வாக ஆணையர் அமுதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் 04.11.2025 முதல் 2026-ஆம் ஆண்டிற்கான “சிறப்பு தீவிர திருத்தம்” (SIR) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 1,85,987 வாக்காளர்களின் விவரங்கள் 2002/2005-ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலுடன் ஒத்துப் போகாததால், அவர்கள் “No Mapping” (வரைபடத்தில் இல்லாதவர்கள்) என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, வாக்காளர் பதிவு அதிகாரிகள் (ERO) மற்றும் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் (AERO) விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணையின் போது, வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ள 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். அந்த 13 ஆவணங்களில், அதிகார வரம்பிற்குட்பட்ட வட்டாட்சியரால் வழங்கப்படும் “நிரந்தர இருப்பிடச் சான்றிதழ்” (Permanent Residence Certificate – Nativity Certificate) ஒன்றாகும்.
தற்போது இந்தச் சான்றிதழ் ஆன்லைன் மூலமாகவும், 60 ரூபாய் கட்டணத்துடனும் வழங்கப்படுவதால், ‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ (FIFO) என்ற அடிப்படையில் வழங்குவதற்கு நீண்ட காலம் எடுக்கும். எனவே, இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக மட்டும், இந்தச் சான்றிதழை வட்டாட்சியர்கள் கையால் (Manually) வழங்க அனுமதி அளிப்பதன் மூலம் நடைமுறையை எளிமையாக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கோரிக்கை வைத்திருந்தார்.
அதுபொலவே, 01.01.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு 2026-ஆம் ஆண்டிற்கான சிறப்பு தீவிர திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் சுயசான்றொப்பமிட்ட நகலை வழங்க வேண்டும். இதில், வ.எண் 6 – நிரந்தர இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வ.எண் 8 – சாதிச் சான்றிதழ் (ஓபிசி/எஸ்சி/எஸ்டி) முக்கியமானவையாகும்.
போதிய விழிப்புணர்வு இல்லாததால், இச்சான்றிதழ்களுக்கு கட்டணம் செலுத்த வாக்காளர்கள் தயக்கம் காட்டுவதாகவும், எனவே கட்டணமின்றி கையால் வழங்க அனுமதிக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் கோரிக்கை வைத்துள்ளார்.
இரு மாவட்ட ஆட்சியர்களின் கோரிக்கையை பரிசீலித்த கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிர்வாக ஆணையர், 2026-ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை குறுகிய காலத்திற்குள் முடிக்க வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டு, டிசம்பர் 26, 2025 முதல் ஜனவரி 25, 2026 வரை, 60 ரூபாய் கட்டணத்தை ரத்து செய்து (Fee Waiver), இருப்பிடச் சான்றிதழ்களை கையால் வழங்க அனுமதிக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அந்தந்த மண்டல துணை வட்டாட்சியர்கள் மற்றும் தலைமையிடத்து துணை வட்டாட்சியர்களுக்கு இந்தச் சான்றிதழை வழங்க அதிகாரம் அளிக்கலாம் என்றும் பரிந்துரைத்துள்ளார்.
வருவாய் நிர்வாக ஆணையரின் பரிந்துரையை ஏற்று, 2026-ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காக, இருப்பிடச் சான்றிதழ் பெறுவதற்கான ஆன்லைன் (ஈ-சேவை) நடைமுறைக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. அதன்படி, 26 டிசம்பர் 2025 முதல் 25 ஜனவரி 2026 வரை, 60 ரூபாய் கட்டணமின்றி, அந்தந்த மண்டல துணை வட்டாட்சியர்கள் மற்றும் தாலுகா தலைமையிடத்து துணை வட்டாட்சியர்கள் கையால் (Manually) இருப்பிடச் சான்றிதழ் வழங்க அதிகாரம் அளிக்கப்படுகிறது என கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிர்வாக ஆணையர் அமுதா குறிப்பிட்டுள்ளாா்.
SIR மூலம் நீக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை எங்கு சமர்ப்பிக்க வேண்டும்? – தேர்தல் ஆணையம் விளக்கம்


