வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் கணக்கீட்டு படிவங்களை முறையாக சமர்ப்பிக்காதவர்களுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் கணக்கெடுப்புப் படிவத்தை முறையாக, முழுமையாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் வாக்காளர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென்று விரைவில் தேர்தல் ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.
இந்நிலையில் இந்த நோட்டீஸ் எவ்வாறு அனுப்பப்படும், யார் மூலமாக அனுப்பப்படும், எப்படி இந்த நோட்டீசுக்கு பதில் அளிக்க வேண்டும் என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

கேள்வி: யார் யாருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்?
பதில்: கணக்கீட்டு படிவத்தை முறையாக பூர்த்தி செய்யாதவர்கள், 2002 2005 தீவிர சிறப்பு திருத்தம் தொடர்பான தகவலை அளிக்காதவர்கள் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படும். கேள்வி: யாரிடம் இருந்து இந்த நோட்டீஸ் அனுப்பப்படும்?
பதில்: சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியிடம் இருந்து இந்த நோட்டீஸ் சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு அனுப்பப்படும்.
கேள்வி : நோட்டீஸை யார் வாக்காளரிடம் வந்து வழங்குவார்கள்?
பதில்: வாக்குச்சாவடியின் நிலை அலுவலர் அந்த வாக்காளரின் வீட்டுக்கு நேரடியாக சென்று அவரிடம் இந்த நோட்டீஸை வழங்குவார்.
கேள்வி: நோட்டீஸில் என்னென்ன தகவல் இடம் பெற்று இருக்கும்?
பதில்: வாக்காளரின் விவரங்கள் என்ன காரணத்திற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது எத்தனை ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எத்தனை நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் உள்ளிட்ட தகவல்கள் அந்த நோட்டீஸில் இடம் பெற்று இருக்கும்.
கேள்வி: ஆவணங்களை எங்கே சென்று சமர்ப்பிக்க வேண்டும்?
பதில்: நோட்டீஸில் எங்கு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற இடம் தெரிவிக்கப்பட்டு இருக்கும் அந்த இடத்திற்கு சென்று நேரடியாக ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். பெரும்பாலும் வாக்காளர் பதிவு அதிகாரியின் அலுவலகத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டி இருக்கும்.
கேள்வி: ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு விசாரணை நடைபெறுமா?
பதில்: ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு வாக்காளர் பதிவு அதிகாரியின் முன்னிலையில் இது தொடர்பான விசாரணை நடைபெறும். பெரும்பாலும் இத்தனை வாக்காளர்களுக்கு ஒரு நாள் என்று குறிப்பிடப்பட்டு அந்த வாக்காளர்கள் அன்று அழைக்கப்பட்டு விசாரணை நடைபெறும்.
கேள்வி: ஆவணங்கள் கொடுத்து விட்டாலே இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்று விடுமா?
பதில்: வாக்காளர் அளிக்கும் ஆவணங்கள் மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரி மேற்கொண்ட விசாரணை ஆகியவற்றை பரிசீலினை செய்து தகுதியான வாக்காளர்களின் பெயர் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். ஒருவேளை ஆவணங்கள் முறையாக இல்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
வர்க்க உணர்வு எப்போது மேலோங்குகிறதோ, அப்போது கம்யூனிசம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் – சுப்பராயன்


