தமிழ்நாடு அரசாங்கத்தின் கல்வி தொலைக்காட்சி உதவியுடன் கல்வி பயின்று, 10, 11, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற “ஜோதிடருக்கு பிறந்தது நல்ல காலம்.கோவை காந்திமாநகர் பகுதியை சார்ந்த பார்த்தீபன் படிப்பின் மீது பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். நன்றாக படித்து படிப்பின் மீது பெரும் ஆர்வத்துடன் இருந்த பார்த்திபனுக்கு, முட்டுக்கட்டையாக அமைந்தது வறுமை. எட்டாம் வகுப்போடு தனது ஏட்டுக்கல்வியை நிறுத்திக் கொண்ட பார்த்தீபன், வீட்டுக்காக உழைக்க ஆரம்பித்தார். கிடைக்கும் வேலைகளை செய்து வந்த பார்த்தீபன், ஒருகட்டத்தில் ஜோதிடம் பயிற்சி பெற்று ஜோதிடம் பார்க்க ஆரம்பித்தார். நல்ல காலம் பிறப்பது குறித்து பலருக்கும் கட்டம் கணித்த ஜோதிடர் பார்த்தீபனுக்கு, கல்வி பயில்வதே தனக்கான நல்ல காலம் என நினைத்தார்.
இந்நிலையில், எல்லோருக்கும் போராத கொரோனா காலம், ஜோதிடர் பார்த்தீபனுக்கு என்னவோ பொற்காலம் ஆனது. அதாவது வீட்டுக்குள்ளே முடங்கி இருந்த ஜோதிடர் பார்த்திபன் விழியில்பட்டது கல்வி தொலைக்காட்சி. 40 வயதை கடந்த நிலையில், வகுப்பிற்கு சென்று படிக்கவோ, தனியார் பயிற்சி பள்ளிகளில் சென்று பாடம் கற்கவோ சூழல் இல்லாமல் இருந்த ஜோதிடர் பார்த்திபனுக்கு, கல்வி தொலைக்காட்சி தன் கனவை கரை சேர்க்கும் என நம்பினார்.
இதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு பாடங்களை, கல்வி தொலைக்காட்சியின் வாயிலாகவும், கல்வி தொலைக்காட்சியின் youtube சேனல் வாயிலாகவும் பாடம் பயில ஆரம்பித்தார். நாட்டத்துடம் படித்த அவா், தனி தேர்வு எழுத திட்டமிட்டார். 2023 ஆம் ஆண்டு தனி தேர்வராக தேர்வு எழுதி, முதல் முயற்சியிலேயே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று 272 மதிப்பெண்கள் பெற்று அசத்தினார். பெரும் நம்பிக்கையை தந்த நகர்வு, ஜோதிடர் பார்த்தீபனை பதினோராம் வகுப்பு படிக்க உந்தியது. வழக்கம் போல கல்வி தொலைகாட்சி மூலம் பயின்ற அவர், 2024 ஆம் ஆண்டு தேர்வு எழுதிய போது வணிகவியல் பாடம் தவிர்த்து அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றார்.உடனே வந்த மறுத்தேர்வில் வணிகவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்று 353 எடுத்தார். அடுத்து மீண்டும் கல்வி தொலைகாட்சி உதவியுடன், 12 ஆம் வகுப்பு படிக்க ஆரம்பித்தார். இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு பொதுத்தேர்வு எழுதியதில், ஆங்கிலம் தவிர அனைத்து பாடங்களில் தேர்ச்சி பெற்றார். சமீபத்தில் நடந்த மறுத்தேர்வில் ஆங்கில பாடத்தின் தேர்வு எழுதிய ஜோதிடர் பார்த்திபன் முடிவுகள் நேற்று வெளியானது. 345 மதிப்பெண்களுடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றார்.

கல்வியே சிறந்த ஆயுதம், அழியாத செல்வம் என்பதனை உணர்ந்த ஜோதிடர் பார்த்தீபன் கனவை கல்வி தொலைகாட்சி கரை சேர்த்திருக்கிறது. 10, 11, 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி வெற்ற பார்த்தீபன், தனித்தேர்வர்களில் தனித்துவமுடன் இருக்கிறார். அடுத்ததாக தமிழ் இலக்கியம் பயில விண்ணப்பிக்கும் பார்த்தீபன் விடுக்கும் விண்ணப்பமே, அனைவரும் படிக்க வேண்டும், படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே. தாய்மொழியான தமிழ் மொழியின் இலக்கியம் பயில்வதே அடுத்த லட்சியம் என்ற ஜோதிடர் பார்த்தீபனுக்கு, கல்வி தொலைகாட்சி மூலம் நல்ல காலம் பிறந்திருக்கிறது. படிக்க நினைப்போருக்கு பெரும் நம்பிக்கை ஊட்டியிருக்கிறது.