தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் அரிசி விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டுள்ளது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 15 நாள் இடைவெளியில் சாப்பாட்டு அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.30 வரை உயர்ந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.


அரிசி விலை உயர்வு நிலவரம் (கிலோவில்):
அரிசி விலை உயர்வு குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விவரங்கள்:
சாதாரண ரக பொன்னி அரிசி: 2 நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.52-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.8 உயர்ந்து ரூ.60 ஆக மாறியுள்ளது.
மைசூர் பொன்னி & ஆந்திரா பொன்னி: கிலோ ரூ.50-ல் இருந்து ரூ.65 ஆக உயர்ந்துள்ளது.
சன்னரக அரிசி: கிலோ ரூ.64-ல் இருந்து ரூ.75 ஆக அதிகரித்துள்ளது.
இட்லி அரிசி: கிலோ ரூ.43-ல் இருந்து ரூ.50 ஆக உயர்ந்துள்ளது.
மூட்டை விலையிலும் கடும் உயர்வு!
சில்லறை விற்பனை மட்டுமின்றி, 26 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையின் விலை ரூ.250 முதல் ரூ.400 வரை உயர்ந்துள்ளது. தொடர்ச்சியாக அதிகரித்து வரும் இந்த அரிசி விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் உணவிற்கே வழியின்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
