தமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையராக தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்விற்கு பின் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநில தகவல் ஆணைய தலைமை ஆணையர் மற்றும் 4 ஆணையர்களை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தலைமைச் செயலாளர் இறையன்பு மே மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில், மாநில தலைமை தகவல் ஆணையராக அவர் நியமிக்கப்பட வாய்ப்பாக கூறப்படுகிறது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் 2005-ல் மாநில தகவல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. மாநில தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால், தகவல் ஆணையர்களாக எஸ்.செல்வராஜ், எஸ்.டி.தமிழ்ச்செல்வன், ஆர்.பிரதாப்குமார், எஸ்.முத்துராஜ், பி.தனசேகரன், எம்.ஸ்ரீதர் ஆகியோர் செயல்பட்டனர்.
தகவல் ஆணையராக பணியாற்றுவோருக்கு 3 ஆண்டுகள் பணிக்காலமாகும். அந்த வகையில், தலைமை தகவல் ஆணையர் ஆர்.ராஜகோபாலின் பதவிக்காலம் கடந்த நவம்பர் 20-ம் தேதி முடிவடைந்து. இதேபோல, தகவல் ஆணையர்கள் எஸ்.செல்வராஜ், எஸ்.டி.தமிழ்ச்செல்வன், ஆர்.பிரதாப்குமார், எஸ்.முத்துராஜ் ஆகியோரது பதவிக்காலம் கடந்த நவம்பர் மாத்த்துடன் முடிவடைந்து காலியாக உள்ளது.
இதற்கிடையில், தமிழக அரசு சார்பில் மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் 4 தகவல் ஆணையர்கள் பதவிகளுக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான பணிகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டன.
உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டு, தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த நிலையில் தகுதியானவர்கள் அடங்கிய பட்டியலை தேர்வுக் குழு தலைவர் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அறிக்கையை கொடுத்துள்ளர்.
அந்தப் பட்டியலில் இருந்து, தலைமை தகவல் ஆணையர் மற்றும் 4 தகவல் ஆணையர்களை முதல்வர், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கொண்ட குழு தேர்வு செய்து ஆளுநருக்கு பரிந்துரைகளை வழங்கும். அதன் அடிப்படையில் ஆளுநர் புதிய தலைமை தகவல் ஆணையர் நியமனம் குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும்.