
தமிழ்நாட்டின் 4 வது பல்லுயிர் பாரம்பரிய தலமாக ஈரோடு மாவட்டம் நாகமலைக் குன்று காடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பல்லுயிர் சிறப்புமிக்க கோவில் காடுகளை, பல்லுயிர் பாரம்பரிய தலமாக, தமிழக அரசு அறிவித்து வருகிறது. அந்த வரிசையில், தமிழ்நாட்டின் 4 வது பல்லுயிர் பாரம்பரிய தலமாக ஈரோடு மாவட்டம் நாகமலைக் குன்று காடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகமலைக் குன்று அடர்த்தியான மலை அடிவாரக் காடு, வறண்ட இலையுதிர் காடு, முட்புதர் காடு, பாறைப் பகுதி, வறண்ட புல்வெளி, நன்னீர் சுனை என பலச் செழிப்பான வாழ்விடங்களை கொண்டுள்ளது.

32.22 எக்டேர் பரப்பளவு கொண்ட நாகமலை குன்றில் உள்ள காட்டுப்பகுதியில் இதுவரை 135 வகையான பறவைகள், 138 தாவர இனங்கள், 106 பூச்சிகள், 23 எட்டுக்காலிகள், 17 ஊர்வணங்கள், 10 பாலூட்டிகள், 8 இதர பல்லுயிர்கள் என மொத்தம் 437 உயிரினங்கள் வாழ்வது சூழல் அறிவோம் குழுவால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்கு 35 உள்ளூர் பறவைகள் கூடமைத்து இனப்பெருக்கம் செய்வது பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக மதுரை அரிட்டாபட்டி, திணடுக்கல் காசம்பட்டி வீரா கோவில், ஈரோடு ஏலத்தூர் ஏரி ஆகிய இடங்கள் பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.