சின்ன வெங்காயத்திற்கு 40% ஏற்றுமதி வரி விதித்த மத்திய அரசு- விவசாயிகள் வேதனை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளான அல்லாளபுரம்,அக்கணம் பாளையம்,காளிநாதன் பாளையம்,குப்பிச்சி பாளையம், வாவிபாளையம் உள்ளிட்ட 18 கிராமங்களில் 4000 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 16-08-23 அன்று மத்திய அரசு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சின்ன வெங்காயத்திற்கு 40% வரி விதித்துள்ளது. விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் இப்பகுதி விவசாயிகளுக்கு இந்த உத்தரவு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலி விதைகள், இயற்கைச் சீற்றம் ஆகியவை ஒருபுறமிருக்க விவசாய பணிக்கு ஆள் பற்றாக்குறை, கூலி, உரம் விலை உயர்வு மற்றும் மருந்து செலவுகள் என பலவித பிரச்சினைகளை சமாளித்து வரும் சூழ்நிலையில், இந்த வரி உத்தரவு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

டீசல்,பெட்ரோல் விலை உயர்வும் விவசாயிகளை பெருமளவில் பாதித்துள்ள நிலையில் இந்த வரி விதிப்பால் வியாபாரிகள் மிக குறைந்த விலைக்கு வெங்காயத்தை கொள்முதல் செய்கிறார்கள். ஒரு ஏக்கர்விற்கு சின்ன வெங்காயம் உற்பத்திக்கு ஒரு லட்சத்திற்கும் மேல் செலவாகும் நிலையில், இந்த வரி விதிப்பால் வருமானம் குறையும் என விவசாயிகள் கண்ணீருடன் வேதனை தெரிவிக்கின்றனர். அறுவடை செய்யப்பட்ட வெங்காயங்களை பட்டறை அமைத்து சேமித்து வரும் நிலையில், இரண்டு மாதங்களுக்குள் உரிய விலை கிடைத்து விற்காவிட்டால் வெங்காயம் அழுகி விற்க முடியாமல் நஷ்டம் ஏற்படும் எனவும் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே மத்திய அரசு 40% வரிவிதிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும், சின்ன வெங்காயத்திற்கு என தனியாக ஏற்றுமதி எண்ணை உருவாக்க வேண்டும் எனவும் சின்ன வெங்காய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.