கொடைக்கானலில் திடீரென்று 5 டிகிரி செல்சியஸ்க்கு கீழ் சென்ற வெப்பநிலையால் கடுமையான உறைபனி நிலவியது.


மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் நவம்பர் மாதம் முதல் குளிர்காலம் ஆரம்பிக்கும். ஆனால் இந்த ஆண்டு அவ்வப்போது பெய்த மழையால் குளிர்காலம் தள்ளிப்போனது. மேலும் வழக்கமாக ஜனவரி இரண்டாம் வாரத்தில் உறை பனி நிறைவு பெறும். ஆனால் இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தன்று உறை பனி லேசாக தென்பட்டது. அதன் பின்பு பத்து நாட்களுக்கு பிறகு இன்று கடுமையான உறை பனி நிலவிவருகிறது. ஏரி சாலை, மன்னவனூர் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான உறைப்பனியின் தாக்கம் இருந்தது.
கடந்த மூன்று நாட்களாக வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் இருந்து வந்த நிலையில், திடீரென்று இன்று வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் கீழ் சென்றதால் கடும் குளிரும் நிலை வருகிறது. இதனால் ஏரி சாலை பகுதிகளில் காலை நேரங்களில் நடை பயிற்சி மேற்கொள்வோர் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டது. கடும் உறை பனியால் மக்கள் தெருக்களில் தீ மூட்டி குளிர்காய்ந்தனர். கொடைக்கானலில் உள்ள சுற்றுலா பயணிகளுக்கு உறை பனி புதிதாக இருந்ததால் அதனை பார்த்து புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
