இலங்கை கடற்படையின் அத்துமீறலும், அராஜகப் போக்கு தொடர்வதை இனியும் அனுமதிக்கக் கூடாது என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ஒரே நாள் இரவில் 47 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் அத்துமீறலும், அராஜகப் போக்கு தொடர்வதை இனியும் அனுமதிக்கக் கூடாது. ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்குச் சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 47 பேரை எல்லை தாண்டியதாகக் கைது செய்திருக்கும் இலங்கை கடற்படை, மீனவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பல்வேறுகட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று ஒரேநாள் இரவில் மட்டும் 47 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த மீனவ சமுதாய மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களை எல்லை தாண்டுவதாகக் கூறி கைது செய்வதையும், சிறையில் அடைத்து சித்ரவதை செய்வதையுமே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் இலங்கை கடற்படையின் அராஜகப்போக்கால், தமிழக மீனவர்கள் தங்களின் வாழ்வாதார மீன்பிடித் தொழிலுக்காகக் கடலுக்குள் செல்லவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வாக அமையும் என்ற குரல் பரவலாக எழுந்திருக்கும் நிலையிலும், அதனை மீட்பதற்கான எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாமல் பேச்சளவில் மட்டுமே இருப்பதே, தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுவதற்கான முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
எனவே, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதோடு, தமிழக மீனவர்கள் எந்தவித அச்சுறுத்தலுமின்றி தங்களின் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளாா்.