ஆளுநர் உரையில் அச்சிடப்பட்டதற்கு மாறாக ஆளுநர் பேசிய வார்த்தைகள் அவை குறிப்பில் இடம்பெறாது என்று முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டது.


சட்டப்பேரவை உரையில் இருந்த அமைதி பூங்கா என்ற வார்த்தையை ஆளுநர் ஆர்.என். ரவி தவிர்த்தார். 46 ஆம் பக்கத்தில் இருந்த, ‘சட்டம், ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது’ என்ற வாக்கியத்தை ஆளுநர் தவிர்த்தார். இதேபோல் சட்டப்பேரவை உரையில் இருந்த பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி ஆகிய பெயர்களையும், சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, திராவிட மாடல் ஆகிய வார்த்தையும் படிக்காமல் ஆளுநர் ரவி தவிர்த்தார்.
அரசின் உரையை முழுமையாக படிக்காமல் சில வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்ததாக திமுக கூட்டணி கட்சிகள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த 2 தீர்மானங்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, தமிழக அரசு தயாரித்த உரைக்கு மாறாக ஆளுநர் ரவி பேசிய வார்த்தைகள் நீக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அச்சிடப்பட்ட ஆங்கில உரை மற்றும் தமிழ் உரை மட்டுமே அவைக் குறிப்பில் ஏற வேண்டும். அச்சிடப்பட்ட பகுதிகளுக்கு மாறாக ஆளுநர் படித்த பகுதிகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
