ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனை அடுத்து பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் காவிரியில் உபரிநீர் வெளியேற்றம் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்தது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதித்த தடையை அண்மையில் மாவட்ட நிர்வாகம் நீக்கியது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழக – கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று 7 செ.மீ மழை பதிவாகியது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியிலிருந்து 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இதனிடையே, நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் நீர்வரத்து அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டார்.