குத்தகை காலம் முடிந்தது! எஸ்.ஆர்.எம். நிறுவனம் அராஜகத்தில் ஈடுப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.எம் ஹோட்டல் குத்தகை காலம் முடிவடைந்ததால் ஓட்டலை கையகப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஓட்டலை திரும்ப ஒப்படைக்க மறுத்து எஸ்.ஆர்.எம் குழுமம் அடாவடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சி மாநகரம் டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ரேஸ்கோர்ஸ் சாலையில் எஸ்.ஆர்.எம் ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் அதனை நடத்தி வருகிறார்.
சுற்றுலாத்துறைக்கு சொந்தமான நிலத்தில் 1995 ஆம் ஆண்டு எஸ்.ஆர்.எம். நிறுவனம் ஹோட்டல் நடத்துவதற்கு குத்தகைக்கு எடுத்துள்ளது.
ஆண்டிற்கு 75 லட்சம் ரூபாய் வாடகை என்கிற உடன்படிக்கையின் அடிப்படையில் 30 ஆண்டு காலத்திற்கு குத்தகை எடுத்துள்ளனர். குத்தகை காலம் நேற்றுடன்(13.06.24) முடிவடைந்த நிலையில் முன்னதாகவே அவ்வப்போது நினைவூட்டல் கடிதம் அனுப்பி உள்ளனர்.

குத்தகை காலம் முடிவடைந்ததையடுத்து இன்று ஹோட்டலிற்கு வந்த சுற்றுலா அதிகாரிகள் ஹோட்டலை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால் ஹோட்டல் நிர்வாகத்தினர் அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்துள்ளனர். இதனை அடுத்து ஹோட்டலுக்கு வந்த திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி ஹோட்டல் நிர்வாகத்தினர் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் அவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்து வருகின்றனர். தங்களுக்கு கூடுதலாக கால அவகாசம் வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் கேட்ட பொழுது சுமார் 38 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளார்கள். ஏற்கனவே பலமுறை நினைவூட்டியும் அவர்கள் ஹோட்டலை தர மறுக்கிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இந்திய ஜனநாயக கட்சி மற்றும் பாஜகவினர் ஹோட்டலிற்கு எதிரில் திரண்டு ஓட்டலுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை ஹோட்டலுக்குள் செல்ல அனுமதிக்காததால் சிலர் அங்கிருந்த சுவரில் ஏறி குதித்து ஹோட்டலிற்குள் சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து ஹோட்டல் நிர்வாகத்தினருக்கும் சுற்றுலா துறையினருக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.


