“அறிஞர் அண்ணா திராவிட வயலை உழுதார்; முத்தமிழ் அறிஞர் நல்ல விதை நட்டார்; அந்த விதை இன்று நாடாளும் அண்ணன் ஸ்டாலின்,” என்று முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு தான் எழுதிய கவிதையை நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான கருணாஸ் வாசித்தாா்.


தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு “மக்கள் முதல்வரின் மனிதநேய விழா” என்ற பெயரில் சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. திரை இசைக் கலைஞர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி, அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான கருணாஸ் தொடங்கி வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர், சென்னை நகரத்தின் தனிச்சிறப்பை எடுத்துரைத்தார். “எத்தனை பேருக்கு அடையாளம் கொடுத்து, வாழ்வாதாரம் வழங்கிய நகரம் சென்னை. சிலை வைக்க வேண்டுமென்றால், சென்னையில் பிறந்த அனைவருக்கும் சிலை வைக்க வேண்டும்,” என்று கூறினார்.
மேலும், “கருணாநிதியாக இருந்த என்னை கருணாஸ் ஆக மாற்றியது சென்னை தான். இளைஞரணியில் இருந்தபோது தளபதியை ஹீரோவாக பார்த்தேன்; இன்று அவருடன் கை குலுக்குகிறேன், சால்வை போர்த்துகிறேன் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல,” எனவும் குறிப்பிட்டார்.
உரையின் முக்கிய அம்சமாக, திமுக கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படுவதாக முதலமைச்சர் உறுதி அளித்ததாக கருணாஸ் தெரிவித்தார். “தமிழ்நாட்டில் ஒரு தொகுதி வழங்கப்படும் என்றும், வெற்றி சின்னமான ‘உதயசூரியன்’ இனி உங்கள் சின்னம் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்,” என்று அவர் மேடையில் மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.
தொடர்ந்து, முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு எழுதிய கவிதையை வாசித்த கருணாஸ், திராவிட இயக்க வரலாற்றை நினைவுபடுத்தினார். “அறிஞர் அண்ணா திராவிட வயலை உழுதார்; முத்தமிழ் அறிஞர் நல்ல விதை நட்டார்; அந்த விதை இன்று நாடாளும் அண்ணன் ஸ்டாலின்,” என்று கவிதையில் குறிப்பிட்டார்.
மேலும் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி கே. பழனிசாமி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். “நாக்கை நாற்பது கிலோமீட்டர் நீட்டினாலும் வாக்குகளை பெற முடியாது,” என்று கூறிய அவர், அதிமுக-பாஜக உறவை சாடியும் பேசினார். “இனி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய பாஜக முன்னேற்றக் கழகமாக மாறிவிடும்,” என்றார்.
அதேபோல், “தாய் கழகமான திமுகவிற்கு வந்து விடுங்கள்; தேர்தல் வேலையும் எளிதாகும். திமுக தலைவர் எந்த பங்கமும் இன்றி உங்களை பாதுகாப்பார்,” என்று கவிதை வடிவில் அழைப்பு விடுத்தார்.
இந்தியாவின் கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் பங்களிக்க கர்நாடகா தயாராக உள்ளது – சித்தராமையா


