சென்னை திருவொற்றியூரில் மழைநீரில் மின்சாரம் கசிந்து 17 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் பேரவலம் நிகழ்ந்துள்ளது. தமிழக அரசு நவ்ஃபலின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க எஸ்டிபிஐ வலியுறுத்துகிறது.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அபுபக்கர் சித்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ”சென்னை திருவொற்றியூரில் நேற்று இரவு (ஜூலை 02), டியூஷன் முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 17 வயது மாணவன் நவ்ஃபல், தேங்கிய மழைநீரில் மின்சாரம் கசிந்து துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இதே இடத்தில் ஏற்கெனவே மின்சாரம் பாய்ந்து இரண்டு, மூன்று விபத்துகள் ஏற்பட்ட போதிலும், மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் நேற்றைய தினம் பேரவலம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும், பழுதை சரிசெய்ய மின்சார வாரியம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

பழுதடைந்த மின்சார வயர்களை சரிசெய்யாமல், அவற்றின் மீது புதிய சிமென்ட் சாலை அமைக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த உயிரிழப்புக்கு மின்சார வாரியத்தின் அலட்சியமே முழுக்காரணம் என்பதால், தமிழ்நாடு அரசு நவ்ஃபலின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது.
சென்னையில் இதுபோன்ற மின்சார விபத்துகளும் உயிரிழப்புகளும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. ஆனால், மின்சார வாரியம் இவற்றைப் பொருட்படுத்தாமல் இருப்பது மேலும் துயரங்களை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க, தமிழ்நாடு அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக, பழுதடைந்த மின்சார வயர்களை உடனடியாக மாற்றுதல், தாழ்வான பகுதிகளில் உள்ள மின் இணைப்பு பெட்டிகள் மற்றும் மின்மாற்றிகளை மாற்றுதல், பொதுமக்களின் புகார்களுக்கு உடனடியாக உரிய தீர்வு காணுதல் மற்றும் மின்சார உபகரணங்களை தவறாமல் பராமரித்தல் ஆகியவற்றை அரசு உறுதி செய்ய வேண்டும்.
மாணவன் நவ்ஃபலின் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு பேரவலம். இனி இதுபோன்ற துயரங்கள் நிகழாமல் தடுக்க, தமிழ்நாடு அரசும், மின்சார வாரியமும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது” என தெரிவித்துள்ளாா்.