Homeசெய்திகள்தமிழ்நாடுசாதி, மத அடையாளங்களுக்கு பள்ளிகளில் இடமில்லை - அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்

சாதி, மத அடையாளங்களுக்கு பள்ளிகளில் இடமில்லை – அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்

-

- Advertisement -

சாதி மற்றும் மத அடையாளங்களுடன் கல்வி வளாகங்களுக்கு யாரும் வரக்கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கல்வி நிலையங்களில் சமூக நீதி, அறிவியல் சிந்தனை மற்றும் ஒற்றுமைக்கு மட்டுமே இடமுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.சாதி, மத அடையாளங்களுக்கு பள்ளிகளில் இடமில்லை - அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், தமிழகத்தில் முதற்கட்டமாக 5,000 பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (AI), பைத்தான் (Python) உள்ளிட்ட கோடிங் பாடங்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். இதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கூறினார்.

we-r-hiring

மேலும், தேர்ச்சி விகிதத்தை மேலும் உயர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், “மதம், ஜாதி அடையாளங்களோடு கல்வி வளாகங்களுக்கு யாரும் வரக்கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். சிறிய கயிறாக இருந்தாலும் நான் பள்ளிக்கு வரும்போது அதை அகற்றிவிட்டுத்தான் வருகிறேன். கல்வி நிலையங்களில் பிரிவினைக்கு இடமில்லை; சமூக நீதி மற்றும் அறிவியல் சிந்தனைக்கு மட்டுமே இடம் உள்ளது” என்றார்.

அடுத்த தலைமுறை, முந்தைய தலைமுறையை விட கல்வியில் மேலும் முன்னேற வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்றும், மற்ற மாநிலங்களை விட தமிழகம் முன்னிலையில் இருப்பது மகிழ்ச்சி அளித்தாலும், உலக அளவில் சிறந்து விளங்கும் நிலையை அடைய வேண்டும் என்றும் அவர் கூறினார். பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் முக்கியமான இடங்கள் என்பதால், போதைப் பழக்கம் உள்ளிட்ட சமூகச் சீர்கேடுகளில் இருந்து மாணவர்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

மேலும், “பிரிவினை மற்றும் வேற்றுமையை வளர்க்கும் எந்த செயலுக்கும் கல்வி வளாகங்களில் இடமில்லை. ஒற்றுமையையும் சமத்துவத்தையும் வளர்க்கும் அனைத்திற்கும் வரவேற்பு உண்டு” என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

4 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் – 7 நாட்களில் விளக்கம் கேட்டு உத்தரவு

MUST READ