கட்சியில் நிர்வாகிகளுக்கு பலவித கருத்துகள் இருக்கலாம் என்றும், ஆனால் காங்கிரஸ் கட்சி திமுக உடன் மட்டும்தான் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


சென்னை சூளைமேட்டில் உள்ள கில் நகர் பூங்காவில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கலந்துகொண்டு சமத்துவ பொங்கலிட்டு மகிழ்ந்தார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம் எம்.பி., பராசக்தி படத்தை நான் பார்ப்பதாக இல்லை என்றும், பராசக்தி படம் ஒரு கமர்சியல் படம் அவ்வளவு தான். ஒருபடத்தை வைத்து அரசியல் narrative set பண்ணலாம் என நினைத்தால் அது அபத்தம் என்றும் தெரிவித்தார். பொதுவாகவே திரைப்படங்கள் வணிக ரீதியாக மட்டுமே எடுக்கப்படுபவை, அதனை அரசியல் நோக்கத்தோடு அணுகுவது தவறானது என்றும் கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சியில் பலருக்கு பலவிதமான கருத்து இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் தான் கூட்டணியில் உள்ளதாகவும் அவர் கூறினார். திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தான் காங்கிரஸ் கட்சியில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கார்த்தி சிதம்பரம், இந்தியா கூட்டணியை தேசிய அளவில் காங்கிரஸும், தமிழகத்தில் திமுகவும் தான் தலைமை தாங்குவதாகவும் குறிப்பிட்டார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் என்ன தவறு உள்ளது? என கேள்வி எழுப்பிய அவர், ஒரு கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என கட்சியை விரும்புவதில் என்ன தவறு உள்ளது? என்று கூறினார். மேலும், தேர்தல் நெருங்குவதால் அடுத்த 4 மாதங்களுக்கு பிரதமர் தமிழுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார் என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.


