“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசை ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பாராட்டு தெரிவித்துள்ளார்….”


அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி சென்னை சைதாப்பேட்டை, எம்.சி.ராஜா மாணவர் விடுதியில் உள்ள அம்பேத்கர் உருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தக்கூடிய நிகழ்வு நடைபெற்று வருகிறது. சாதியற்ற ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை இந்தியாவில் அமைக்க வேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தவர், ஆனால் அவருடைய கனவுகள் நிறைவேறாத கனவுகளாக இருந்து கொண்டுள்ளது அவர் தெரிவித்தார்.
அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சாசனத்திற்கு விரோதமான அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்காத ஒரு கூட்டம் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து கொண்டுள்ளது என விமர்சித்துள்ளாா்.
அரசியல் சாசனத்தின் மிக முக்கியமான கூறுகளாக உள்ள மதசார்பின்மை ஜனநாயகம் சோசலிசம் உள்ளிட்டவைகளுக்கு நேர் எதிர் கொள்கை கொண்டவர்களாக ஒன்றிய பாஜக அரசு உள்ளது என குற்றம்சாட்டினாா்.
மதசார்பின்மை என்ற கோட்பாட்டின் மீது ஒரு கொடூரமான தாக்குதலை வாய்ப்பு கிடைக்கிற பொழுதெல்லாம் பாஜக நிகழ்த்திக் கொண்டிருக்கிறது என்பதற்கு திருப்பரங்குன்றம் கோவிலில் நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய நிகழ்வுகள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளாா்.
நீதி அரசர்கள் அரசியல் சாசனத்திற்கும் உட்பட்டும் சட்டத்திற்கு உட்பட்டுதான் தீர்ப்பளிக்க முடியுமே தவிர தங்களுடைய நம்பிக்கைகளை தீர்ப்பில் வெளிப்படுத்துவது சட்டவிரோதமானது, நீதிக்கே அதிபதியாக இருக்கக்கூடிய ஒருவர் எச்சரிக்கையாகவும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் அந்த முறையில் திருப்பரங்குன்றம் வழக்கை விசாரிக்க கூடிய நீதிபதி நடந்து கொள்ளவில்லை என்றார்.
நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது என பாஜகவும் ஆர்.எஸ்.எஸும் சொல்கின்றனர். ஆனால், 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துவிட்டு தான் சென்றார்கள். மசூதிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்ற உறுதியை அன்று உத்தர பிரதேச முதலமைச்சராக இருந்த கல்யாண் சிங் தெரிவித்திருந்தார், உச்ச நீதிமன்ற தீர்ப்பு அப்போது மீறப்பட்டது, மசூதி இடிக்கப்பட்டது.
ஆனால் இன்று தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்ற தீர்ப்பை மீறி இருப்பதன் மூலம் திருப்பரங்குன்றம் மலை பாதுகாக்கப்பட்டுள்ளது. ரெண்டுமே தீர்ப்பை மீறியதுதான் உத்திரபிரதேச அரசு செய்தது பாபர் மசூதியை இடிக்க பயன்படுத்தப்பட்டது தமிழ்நாடு அரசு மத சார்பின்மையை பாதுகாத்துள்ளது.
திருப்பரங்குன்ற விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய முழு வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்த முடிவை ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் வரவேற்றுக் கொண்டிருப்பதாகவும், மதச்சார்பின்மையை காத்து நிற்கும் அரசு என்ற பெருமை இதில் வெளிப்படுவதாகவும் அவர் பாராட்டினார்.
இதேவேளை மாணவர் விடுதி உணவுப்படி உயர்த்த வேண்டும் என்று அரசிடம் அவர் கோரிக்கை வைத்தார்.
சேராத இடத்தில் சேர்ந்தால் இப்படிதான் எடப்பாடி மாற்றி மாற்றி பேச வேண்டி இருக்கும், எடப்பாடி பழனிச்சாமி சேர்ந்த இடம் அப்படி சேர்ந்த இடத்திற்கு ஏற்றது போல் 2026 தேர்தலை மையமாக வைத்து எடப்பாடி பழனிச்சாமி பேசுவது கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா்.
