திருப்பத்தூர் மாவட்டம் அருகே பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மேரி இம்மாகுலேட் என்ற தனியார் பள்ளியின் வளாகத்திற்குள் நேற்று மதியம் 3.30 மணியளவில் சிறுத்தை நுழைந்துவிட்டதாக செய்தி பரவியது. இதனைத்தொடர்ந்து மாணவர்களை உடனடியாக வகுப்பறைக்குள் வைத்து ஆசிரியர்கள் பூட்டினர். சிறுத்தையின் நடமாட்டம் அறிந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு அருகிலுள்ள அறைகளுக்குள் தஞ்சமடைந்தனர். இதில் பள்ளியில் மர வேலை செய்து கொண்டிருந்த கோபால் என்ற முதியவர் பொதுமக்களின் எச்சரிக்கையை மீறி தனது சட்டையை மட்டும் எடுத்து வருகிறேன் என துணிச்சலுடன் சென்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் மறைந்திருந்து பாய்ந்த சிறுத்தை முதியவரின் தலையில் பலமாக தாக்கிவிட்டு தப்பியது. இந்த சம்பவத்தில் காயமடைந்த முதியவர் பொதுமக்கள் உதவியுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து பள்ளியில் உள்ள கார் செட்டில் பதுங்கியிருந்த சிறுத்தையானது தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி கூண்டில் அடைத்தார். அதன் பின் அதற்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, பத்திரமாக காப்புக் காட்டில் விடப்பட்டது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.