கடந்த 9 ஆம் தேதி ஆளுநர் உரையின்போது, ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிடமாடல், அம்பேத்கர், கருணாநிதி உள்ளிட்ட சில வார்த்தைகளை தவிர்த்தும் உரையில், ஒரு பத்தியை அப்படியே விட்டுச்சென்றும் படித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அவை நிகழ்வுகள் முடிந்து தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே வெளியேறினார்.
ஆளுநர் அவையிலிருந்து வெளியேறிய விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் உரையாற்றிய சபாநாயகர் அப்பாவு, “ஆளுநர் உரையாற்றும்போது உறுப்பினர்கள் கோஷமிட்டது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆளுநர் இருக்கைக்கு எதிரே நின்று கோஷம் எழுப்பியதை தவிர்த்திருக்க வேண்டும். ஆளுநர் பேசும் போது அசாதாரண சூழல் ஏற்பட்டுவிட்டது. அசாதாரண சூழலை உருவாக்கியது அவையோ, அரசோ இல்லை. முதலமைச்சரின் மதிநுட்பத்தால்தான் சட்டமன்றத்தின் மாண்பு காக்கப்பட்டது. இந்த நிகழ்வு இந்தியா முழுவதும் உள்ள சட்டமன்றங்களின் நடவடிக்கைக்கு முன்னுதாரணம்.
இந்தியாவில் உள்ள அனைத்து சட்டமன்றங்களின் மாண்பையும் முதல்வர் ஸ்டாலின் காத்துள்ளார். ஆளுநரோடு வந்த விருந்தினர் பேரவை நடவடிக்கைகளை பதிவ் செய்திக்கொண்டிருந்தது உரிமை மீறல். இதனை ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க அவை உரிமை மீறல் குழுவிற்கு உத்தரவிடப்படுகிறது. ஆளுநர் உரையின் போது காட்டிய கண்ணியத்திற்காக தமிழ்நாடே ஒட்டுமொத்தமாக முதலமைச்சரின் துணிவை பாராட்டிக்கொண்டு உள்ளது. ஆளுநர் எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பதற்கு தமிழ்நாடுதான் எடுத்துக்காட்டு. ஆளுநர் உரையின்போது முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானம் இந்திய அளவில் பேசப்படுகிறது.” எனக் கூறினார்.
