ஜனவரி 13 ஆம் தேதிவரை சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.


அலுவல் ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “நாளை இரங்கல் தீர்மான நிறைவேற்றி பேரவை ஒத்திவைக்கப்படுகிறது. கூட்டத்தொடரின் கடைசி நாளில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிப்பார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கேள்வி, நேரம் இடம்பெறும். ஆளுநர் பல பகுதிகளை விட்டும், புதிதாக சில வாசகங்களை சேர்த்தும் படித்துள்ளார். தேசிய கீதம் இசைக்கப்பட்ட பிறகு ஆளுநர் அவையில் இருந்து வெளியேறுவதே மரபு. அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரையே ஆளுநர் வாசிக்காதது வேதனை.பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் ஏன்? இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.
அரசியல் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய ஆளுநர் ஏன் இப்படி நடந்துகொண்டார் என தெரியவில்லை. சட்டப்பேரவையில் ஆளுநர் அநாகரிகமாக நடந்துகொண்டார். ஒன்றிய அரசு தயாரித்த உரையையே குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் வாசிக்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி உயர் பதவிக்கு ஆசைப்பட்டு இப்படி நடந்து கொள்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே ஆளுநர் வெளியேறியதால் நாட்டையே அவர் அவமானப்படுத்திவிட்டதாக நினைக்கிறேன்.” எனக் கூறினார்.
முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் சில விமர்சனங்களை முன்வைத்தபோது பேரவையில் இருந்து ஆளுநர் ரவி பாதியில் வெளியேறினார்.முறைப்படி சட்டப்பேரவைக் கூட்டம் முடியும் முன்னரே ஆளுநர் ரவி அவையிலிருந்து புறப்பட்டு சென்றார். தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வு முறைப்படி முடியும் முன்பே ஆளுநர் அவசர அவசரமாக பேரவையில் இருந்து வெளியேறியதற்கு சபாநாயகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
