
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வுகள் நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது. அதன்படி கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர் ஆகிய பதவிகளில் காலியாக இருந்த 3,935 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வினை 11.48 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.
அதாவது ஒரு இடத்திற்கு தோராயமாக 250 பேர் வீதம் போட்டி நிலவும் சூழலில், காலிப்பணியிடங்களின் எண்னிக்கை மேலும் 727 அதிகரிக்கப்பட்டது. தற்போது மொத்தப் பணியிடங்களின் எண்ணிக்கை 4,662 ஆக இருக்க, குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகளை tnpsc.gov.in என்கிற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

இந்த முடிவுகளின் அடிப்படையில் அடுத்தக்கட்டமாக அதிக கட்-ஆஃப் பெற்ற தேர்வர்கள் இணையதளம் வாழியாகவே சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்படுவர். பின்னர் பதிவு எண்களுடன் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும். இதனையடுத்து மூல சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அப்போது நேரடியாக சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு, அவர்களுக்கான ஆணை வழங்கப்படும்.



