நாளை குமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!
நாளை இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருகையையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக குமரி சுற்றுலா தலங்களான கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, கடற்கரை சாலை, திரிவேணி சங்கமம் உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு நாளை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாளை ஹெலிகாப்டர் மூலமாக குமரிக்கு வருகை தருகிறார். அவர் தனிப்படகில் பயணம் செய்து குமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவைகளை பார்வையிடுகிறார். பின்னர் விவேகானந்த கேந்திரா வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவிலுக்கு சென்று வழிப்படுகிறார். அங்கு கேந்திரா நிர்வாகிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்துகிறார்.
இதனை தொடர்ந்து குடியரசு தலைவர் ஹெலிகாப்டர் மூலமாக குமரி வந்து இறங்கும் அரசு விருந்தினர் மாளிகை ஹெலிகாப்டர் தளம் மற்றும் விவேகானந்த கேந்திரா வளாகம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் போலிஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள். அதேபோல் குமரியில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் முழு விபரங்களும் காவல்துறையால் சேகரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக குமரி கடல் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை கடற்கரை சாலை திரிவேணி சங்கமத்திற்கும் சுற்றுலா பயணிகள் செல்ல நாளை தடை விதிக்கப்பட்டுள்ளது. பூம்புகார் சுற்றுலா படகு சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
குமரியில் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு குடியரசு தலைவர் சென்ற பின்னர் வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.