தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலையை எளிதில் https://kmut.tn.gov.in/index.html என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். ஆதார் எண்ணைப் பயன்படுத்தி விண்ணப்பத்தின் நிலை தெரியவரும்.தமிழகத்தில் மகளிா் உரிமைத் திட்டம்
மகளிர் உரிமை தொகை திட்டம் தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற திட்டமாகும். அந்த வகையில், கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக திமுகவின் தேர்தல் வாக்குறுதியாக மகளிர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆட்சிக்கு வந்த திமுக மகளிர் உரிமை தொகை திட்டத்தை 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. வாழ்நாள் முழுவதும் உழைக்கும் பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆண்டுக்கு 12,000 ரூபாய் என மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கி, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது மற்றும் சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ வழிவகுக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமை தொகை பெற நிபந்தனைகள்இந்த திட்டத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் முதல் கட்டமாக 1.06 கோடி பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். குறிப்பாக மகளிர் உரிமை தொகை பெற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அதில் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது. 5 ஏக்கருக்கு மேல் நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் இருக்கக் கூடாது. ஆண்டுக்கு 3600 யூனிட் மின்சாரத்திற்கு மேல் பயன்படுத்துபவர்கள் தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள், வருமான வரி செலுத்துவோர் ஆகியோரின் குடும்பங்கள் தகுதி பெற முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சுமார் 60 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் மகளிர் உரிமை தொகை பெற எப்போது விண்ணப்பங்கள் வழங்கப்படும் என மக்கள் காத்திருந்தனர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் தற்போது நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் பெறலாம் என தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில் ஜூலை 15 முதல் மகளிர் உரிமை தொகை கேட்டு பல லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான முடிவு 45 நாட்களில் தெரியவரும் என கூறியிருந்தது. எனவே தற்போது வரை 7 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பித்த நிலையில், விண்ணப்பத்தின் நிலை என்ன என தெரியாமல் பலரும் தவித்து வருகிறார்கள்.
மகளிர் உரிமைத்தொகை! கிடைக்குமா.? கிடைக்காதா.?மகளிர் உரிமை தொகை விண்ணப்பத்தின் நிலையை ஈசியாக தெரிந்து கொள்ளலாம். https://kmut.tn.gov.in/index.html என்ற இணையதள முகவரியில் உள்ளே சென்றதும் முகப்பு பக்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமை தொகை நிலை தெரிந்து கொள்ள ஆதார் எண்ணை சமர்பிக்க வேண்டும். இதனை தொடர்ந்து ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும். அதனை பதிவு செய்தவுடன் மகளிர் உரிமை தொகை விண்ணப்பத்தின் நிலை என்ன என தெரியவரும். மகளிர் உரிமை தொகை பெற தகுதியானா நபரா? அல்லது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா? அல்லது இன்னும் பரிசீலனையில் உள்ளதா என தெரிந்து விடும். எனவே மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பித்த மகளிர்கள் இந்த இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பத்தின் நிலையை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
சென்னைப் பல்கலைக்கழகத்தை முடக்கும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் – TTV தினகரன்