இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் காசாவில் 15 மாதங்களாக நடைபெற்று வந்த உக்கிரமான போர் முடிவுக்கு வந்துள்ளது.
காசாவின் ஆட்சியாளர்களான ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதி திடீரென தாக்குதல் நடத்தி, ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக நீடித்து வந்த இந்த போரில் இஸ்ரேல் தாக்குதலில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். பல லட்சம் பேர் முகாம்களில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.
இதனிடையே, காசாவில் நடைபெற்று வந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டன. இது தொடர்பாக கத்தார் தலைநகர் தோஹாவில் 96 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தம் ஜனவரி 19-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும், 6 வாரங்களில் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலஸ்தீன கைதிகள் – இஸ்ரேலிய பிணைக் கைதிகளை பரிமாற்றம் செய்யவும் இரு தரப்பினரும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இருநாடுகள் இடையிலான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது இறுதி உரையில் அறிவித்தார். மேலும், பிணைக்கைதிகள் விடுதலை மற்றும் போர் நிறுத்தத்திற்கு நடவடிக்கை மேற்காண்ட அமெரிக்காவுக்கு இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு நன்றி தெரிவித்தார். இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், அமெரிக்க அதிபர் பைடன், இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.