சர்வதேச தடகள போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்க தடை
சர்வதேச மகளிர் தடகளப் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உலக தடகள அமைப்பு இந்த முடிவு எடுக்க காரணம் என்ன?
சர்வதேச அளவில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கைகளின் பங்கேற்பு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. அவர்கள் மகளிர் பிரிவில் விளையாடி வரும் நிலையில் சர்வதேச தடகளப் போட்டிகளில் திருநங்கைகள் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மகளிர் பிரிவில் இனி திருநங்கைகள் விளையாட தடை விதித்து உலக தடகள அமைப்பு உத்தரவிட்டிருக்கிறது.
மேலும் ஆண்பாலின ஹார்மோன் அதிகம் உள்ள பெண்கள் பங்கேற்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பேசிய உலக தடகள அமைப்பின் தலைவர் செபாஸ்டியன் கோ ஆணாக பருவம் எய்தி பின்னர் பெண்ணாக மாறியவர்கள் பங்கேற்பதால் மகளிர் பிரிவில் சரிசமமான போட்டி இருப்பதில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவின் படி ஆண்பால் இன ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அதிகம் இருக்கும் பெண்கள் மருந்து மூலம் அதன் அளவை குறைக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு குறைக்கப்பட்ட அளவிலேயே அந்த ஹார்மோன்கள் இருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் புடாபெஸ்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரும் அடுத்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளன. புதிய உத்தரவால் பல வீராங்கனைகள் இவற்றில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தென்னாபிரிக்காவின் காஸ்டர் செமென்யா, நமீபியாவின் எம்போமா ஆகிய நட்சத்திர வீராங்கனைகள் பாதிக்கப்படுவர். இந்த பிரச்சனையை தீர்க்க திருநங்கைகள் தலைமையில் குழு அமைக்கப்படும் என உலக தடகள அமைப்பு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு உலக தண்ணீர் விளையாட்டு போட்டிகளில் விளையாட திருநங்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதனால் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் அவர்களால் விளையாட முடியாத நிலையில் தடகள போட்டியிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பது திருநங்கை வீராங்கனைகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.