டெல்லியில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். அப்போது பிரதமர் மோடியை நேரில் சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது.

பிரதமராக மோடி மூன்றாவது முறை ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் முதல் நிதி ஆயோக் கூட்டம் இதுவாகும். இந்நிலையில், இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.
கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மத்திய அரசின் நிலுவைத் தொகை, நிதி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக வரும் 26 இரவு அல்லது 27-ம் தேதி காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார். நிதி ஆயோக்கின் ஒன்பதாவது நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார்.
நிதி ஆயோக்கின் உச்ச அமைப்பான கவுன்சிலில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர் மற்றும் பல மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். நரேந்திர மோடி அரசு மூன்றாவது முறையாக பதவியேற்றதை அடுத்து நிதி ஆயோக் அமைப்பு சீரமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.