
நக்கீரன் கோபாலுக்கு மிரட்டல் விடுத்த புகாரில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையம் குறித்து வார இதழான நக்கீரனில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக நக்கீரன் பத்திரிக்கையை கண்டித்து கடந்த மாதம் 27ம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, நக்கீரன் கோபாலுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி தலைவரும், இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகனுமான ஓம்கார் பாலாஜி ஆவேசமாக பேசியிருக்கின்றார்.


அப்போது அவர், “ஒருநாள் ஆட்சி மாறும்… மவனே நீ பேசுற பேச்சிக்கு… தெருவுல நாய் மாரி இழுத்துட்டு வந்து விலங்கு மாட்டி தூக்கி உன்ன உள்ள போடல… என்னடா நாக்குல உனக்கு நரம்பு இருக்கா இல்லையாடா … நாக்கை இழுத்து அறுத்துப்போடுவேன்” என ஓம்கார் பாலாஜி ஆர்பாட்டத்தில் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருக்கிறார். இதுதொடர்பான புகாரின்பேரில் பந்தைய சாலை போலீசார் ஓம்கார் பாலாஜி மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஓம்கார் பாலாஜி கைதைக் கண்டித்து இன்று காலை 11 மணியளவில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் நடத்த அக்கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது.



