எதையாவது செய்து சமூக வலைத்தளங்களில் அதிக லைக்ஸ் வாங்க வேண்டும் என்ற வெறித்தனம் தற்போதைய இளைஞர்களிடம் மேலோங்கி இருக்கிறது.

என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஏடாகூடமாக ஏதாவது செய்து சிக்கல்களை இக்கால இளைஞர்கள் ஏற்படுத்தி விடுகின்றனர்.
தென்காசியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளி போல் வேடமிட்டு அங்குள்ள மருத்துவமனை ஊழியரிடம் பிராங்க் செய்து சிக்கியிருக்கிறார்கள் இரண்டு இளைஞர்கள்.
சமூக வலைதளங்களில் தாங்கள் தனியாகத் தெரிய வேண்டும் என்பதற்காக. அதிகரிக்கும் ரீல்ஸ் மோகத்தால் எதிர்மறை விளைவுகள் ஏற்படுகிறது. தென்காசி மாவட்ட இளைஞர்கள் தற்போது அதிகமாக ரீல்ஸ் வீடியோக்களில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறை, ஆசிரியர்கள், மருத்துவர்கள் என பலரையும் கிண்டல் செய்து வீடியோ எடுத்து பதிவிடுகின்றனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த பீர்முகம்மது (30) மற்றும் சேக் முகம்மது (27) ஆகிய இருவரும் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் தனது கையில் அடிபட்டது போல கட்டு போட்டுக்கொண்டு பிராங்க் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்தனர்.
ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு இடையூறாக செயல்பட்டதாகவும், வீடியோ எடுக்கும் பொழுது கேள்வி எழுப்பிய மருத்துவமனை ஊழியரிடம் அவதூறாக பேசியதாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் அரசு ஆஸ்பத்திரி போன்ற அத்தியாவசிய அமைப்புகள் மீது எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும் செயல்களில் இளைஞர்கள் ஈடுபட வேண்டாம். சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது, சிக்கினால் சிக்கல் தான் என்பதை உணர்ந்து செயல்படுங்கள் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட இவர்கள் தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளனர். இதன் பின்னர் பிராங்க் வீடியோ எடுத்ததற்கு மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
அதில் தனது உறவினரான சர்தார் என்பவரை கிண்டல் கேலி செய்யும் நோக்கில் தான் வீடியோ எடுக்கப்பட்டதாகவும் அரசு மருத்துவமனை நோயாளிகள் மற்றும் ஊழியர்களை காயப்படுத்தும் நோக்கில் எடுக்கவில்லை எனவும் தங்களது நடவடிக்கையால் மருத்துவமனை நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் காயப்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் இனிமேல் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.