கும்பகோணத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி பங்கேற்ற களஆய்வுக் கூட்டத்தில் பேச அனுமதி வழங்கப்படாததால் தொண்டர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக களஆய்வு கூட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, காமராஜ் ஆகியோர் கலந்துகொண்டு கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் திண்டுக்கல் சீனிவாசன் பேச சென்றபோது, தொண்டர் ஒருவர் தான் பேச வேண்டும் என்று மைக்கை பிடித்தார்.
அப்போது, மாவட்ட செயலாளர் பாரதிமோகன் உட்பட பலரும் அவரை தடுத்ததால், அந்த தொண்டர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் திண்டுக்கல் சீனிவாசன் முன்னிலையில் அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் அந்த நபரிடம் திண்டுக்கல் சீனிவாசன் விசாரித்தபோது, தலைவர்கள் மட்டுமே பேசி வருகிறீர்கள், தொண்டர்களுடைய கருத்தை கேட்க வேண்டும் என்றும், அப்போது தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்று அந்த நபர் தெரிவித்தார். பின்னர் அவரை ஒரு தரப்பினர் வேறு பகுதிக்கு அழைத்துச் செல்ல முற்பட்டதால் கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.