தமிழ்நாட்டில் இருக்கும் பலகோடி மக்களுக்கு லைப் கொடுத்ததால்தான் கலைஞர் இன்னும் Live-ஆக இருக்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

கலைஞர் நூற்றாண்டின் நிறைவு விழாவை முன்னிட்டு திமுக மகளிர் அணி சார்பில் “கலைஞர் 100 வினாடி வினா” இறுதிப் போட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. திமுக எம்.பி., கனிமொழி தலைமையில் நடைபெற்ற இந்த நிழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் இருக்கும் பலகோடி மக்களுக்கு Life கொடுத்ததால்தான் கலைஞர் இன்னும் Live-ஆக இருக்கிறார் என தெரிவித்தார். இந்தியாவின் தனிப்பெரும் தலைவராக திகழ்ந்தவர் கலைஞர் என்றும், தமிழ்நாடும், தமிழக மக்களும் முத்தமிழறிஞர் கலைஞரை ஆயிரம் ஆண்டுகள் போற்றுவர் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
பாசத்தை பொழியும்போது கனிமொழியாகவும், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி நாடாளுமன்றத்தில் பேசும்போது கர்ஜனை மொழியாகவும் இருக்கிறார் தங்கை கனிமொழி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். புதிய சிந்தனைகள்தான் திராவிட இயக்கத்தை இன்றும் வழிநடத்துவதாக தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 லட்சம் பேரை திராவிட இயக்க வரலாறை படிக்கவைத்ததன் மூலம் வினாடி வினா போட்டி வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறினார்.
என் உயிரினும் மேலான பேச்சுப் போட்டி மூலம் ஏராளமானோர் பேச்சாளர்களாக உருவாகியுள்ளதாகவும், வினாடி வினாவில் வெற்றி பெற்றவர்கள் பிறரையும் உருவாக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். வாட்ஸ் அப்பில் வரும் செய்திகளை ஆராய்ந்தறிந்து செயல்பட வேண்டும் என்றும், சொல் புதிது, பொருள் புதிது என்ற முறையில் செயல்பட வேண்டும் என்றும் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.