சென்னை பூவிருந்தவல்லி கிளைச் சிறையில் காவல்துறை அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் பிரபல ரவுடி அரும்பாக்கம் ராதா உள்ளிட்ட 10 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


சென்னை பூவிருந்தவல்லி கிளைச் சிறையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் 2 ஸ்மார்ட் போன்கள் உட்பட 5 செல்போன்கள், 5 சிம்கார்டுகள், சார்ஜர், பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பூவிருந்தவல்லி கிளைச் சிறையில் பணியாற்றிய துணை அலுவலர் செல்வராஜ், உதவி அலுவலர் ஜான்பிரிட்டோ, தலைமை காவலர்கள் மாரி, செல்வம் உட்பட 11 பேரை அதிரடியாக தற்காலிக நீக்கம் செய்தனர்.

தொடர்ந்து, செல்போன் சிக்கிய விவகாரம் தொடர்பாக புழல் சிறை கூடுதல் கண்காணிப்பாளர் தர்மராஜ் உள்ளிட்ட சிறைத்துறை அதிகாரிகள், பூவிருந்தவல்லி கிளைச் சிறையில் உள்ள கைதிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது, பலர் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்த நிலையில் பிரபல ரவுடி அரும்பாக்கம் ராதா, ரெட்டில்ஸ் சேதுபதி, வெள்ளவேடு ராஜேஷ், குள்ள கார்த்தி, ஆகாஷ், காமேஷ், பிரபு, தியாகு, ஜாகீர் உள்ளிட்ட 10 பேர், காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். யூனிஃபார்ம் போட்டா என்ன பெரிய ஆளா? என்றும், தாங்கள் வெளியே வந்தவுடன் உங்களில் யார் சிக்கினாலும் தொலைத்து விடுவோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் அறையில் இருந்த சிசிடிவி கேமிராவை உடைத்து, கையில் வைத்திருந்த குவளை, தட்டு உள்ளிட்ட பொருட்களை கீழே வீசி ரகளையில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சிறைத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தர்மராஜ், மிரட்டல் விடுத்த 10 பேர் மீதும் பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் 10 மீதும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது, பொருட்களை சேதப்படுத்தியது என 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறைத்துறை அதிகாரிகளை கைதிகள் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.


