முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இரவு காலமானார். மன்மோகன் சிங் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு உயிரிழந்தார்.

இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தையாக கருதப்படுகிறார் மன்மோகன் சிங் . 1991ல் நிதியமைச்சராக இருந்த அவர், தாராளமயமாக்கல் மூலம் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு புதிய உச்சங்களை கொடுத்தவர். பத்து ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் மீது மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெரும் மரியாதை வைத்திருந்தார் என்பதை பத்திரிக்கையாளரும், அரசியல்வாதியுமான மருது அழகுராஜ் இப்போது நினைவு கூர்ந்துள்ளார்.
‘‘2010-ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் ஊழல் அலையடித்த காலம். தேதத்தின் பாதுகாப்பு தொடர்புடைய அலைக்கற்றைகளை பாகிஸ்தான் தொடர்புடைய பால்வாக்களுக்கும்,
சீனாவுக்கு ஆயுதக் கொள்முதல் செய்து கொடுக்கும் நார்வேயின் டெலிநார் கம்பெனிக்கும் ஒதுக்கீடு செய்யவிட்டு வேடிக்கை பார்த்த நீங்க “மன்மோகனா? இல்லை மண்மோகனா?” என்று பெட்டிச் செய்தி ஒன்றை நமது எம்ஜிஆரில் நான் எழுதிவிட, காலையில் புரட்சித் தலைவி அம்மாவிடம் இருந்து அழைப்பு…
“என்ன நினைச்சிட்டிருக்கீங்க மருது..? மன்மோகன்சிங் யார் தெரியுமா?
இந்திய ரூபாய் நோட்டில் கையெழுத்திட்ட ஒரே பிரதமர்… உலகநாடுகளில் எங்கு பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அவரிடம் தான் ஆலோசனை கேட்கிற அளவுக்கு முதிர்ந்த பொருளாதார நிபுணர்.
என்மீது அளவற்ற மரியாதை கொண்டவர் அவரை இப்படி எழுதியது மிகப்பெருந்தவறு. இது உங்களுக்கு நான் தரும் கடைசி எச்சரிக்கை”..
இப்படி புரட்சித் தலைவி அம்மாவிடம்
நான் வாங்கிய உக்கிரமான ஒரே எச்சரிக்கை இதுதான்..
இப்படி நான் வணங்கும் தெய்வம் அம்மாவின் அபிமானம் பெற்ற முன்னாள் பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களது மறைவுக்கு என் நெஞ்சார்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்