Homeசெய்திகள்கட்டுரைதமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் ஆளுநர்

தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் ஆளுநர்

-

- Advertisement -

இந்தியாவில் உயர்கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் மாநிலம் தமிழ்நாடு என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழக மாணவர்களின் வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் காரணமாக இருந்து வருவது பல்கலைக்கழகங்கள். அந்த பல்கலைக்கழகங்கள் தற்போது ஆளுநரின் அடாவடியினால் முடங்கிப் போய் விட்டது.

பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர் பதவி என்பது உடம்பை இயக்கும் மூளையை போன்றது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முன்பு துணை வேந்தர் நியமனத்தில் எவ்வித சிக்கலும் இல்லாமல் இருந்து வந்தது. அதனால் மாணவர்களின் கல்வியில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருந்தது.

ஒரு துணை வேந்தரின் பதவி காலம் 3 ஆண்டுகள். ஒருவருடைய பதவி காலம் முடிவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு அடுத்த துணை வேந்தரை நியமனம் செய்கின்ற நடைமுறை தொடங்கிவிடும். புதிய துணை வேந்தரை தேர்ந்தெடுக்கும் குழுவில் ஆளுநர், தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட ஒருவர் மற்றொருவர் பல்கலைக்கழக சிண்டிகேட்டால் நியமிக்கப்படுவர் என்று 3 பேர் கொண்ட தேடுதல் குழு நியமிக்கப்படும்.

இந்த குழு 10 பேர் கொண்ட பட்டியலை தயார் செய்து, அதில் 3 பேரை தேர்வு செய்து பல்கலைக்கழக வேந்தரான ஆளுநருக்கு அனுப்பி வைக்கும். அந்த மூன்று பேரில் ஒருவரை துணை வேந்தராக ஆளுநர் நியமனம் செய்வார். இந்த நடைமுறையில் தான் துணை வேந்தரை ஆளுநரும் மாநில அரசும் இணைந்து தேர்வு செய்து வந்தார்கள்.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி வந்த பின்னர் தமிழ்நாட்டின் நடைமுறை, விதிமுறை, சட்டம் அனைத்தையும் துச்சமாக நினைத்து வருகிறார். மாநில அரசு பரிந்துரை செய்து அனுப்பி வைக்கின்ற தேடுதல் குழுவை ஆளுநர் ஏற்காமல், பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதி இடம்பெற வேண்டும் என்று தேடுதல் குழுவிற்கான பரிந்துரையை தொடர்ந்து திருப்பி அனுப்பி வந்தார்.

ஆளுநர் ஏற்படுத்தியுள்ள இந்த சிக்கல்களால் கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகிய 6 பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்கள் இல்லை. மேலும் 3 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர் பதவி காலம் முடியும் தருவாயில் உள்ளது.

இதனால் உயர்கல்வி சார்ந்த நிர்வாகம் முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டமளிப்பு சான்றிதழ்களில் துணை வேந்தர்கள் பெயர் இல்லை. அதனால் பட்டயப்படிப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதில் மாநில அரசும் முக்கிய முடிவுகள் எடுக்க முடியாமல் தவித்து வருகிறது. இந்த நெருக்கடிக்கு இடையில் தற்போது ஒன்றிய அரசின் அறிவிப்பால் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் மேலும் சிக்கல்கள் அதிகரித்துள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசுகளுக்கு பங்கு இல்லாமல் முழுக்க முழுக்க ஆளுநர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் ஒன்றிய அரசு வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி ஆளுநரால் நியமனம் செய்யப்படுபவரே தேடுதல் குழுவின் தலைவராக இருப்பார். மேலும் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதி ஒருவரும், சிண்டிகேட் மற்றும் செனட்டின் பிரதிநிதி ஒருவரும் உறுப்பினர்களாக இருப்பார்கள். ஆக துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசுக்கு எவ்வித உரிமையும் இல்லை.

மாநில அரசின் நிதியினாலும், மாநில மக்களின் வரிப் பணத்தினாலும் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அந்த மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் ஒரு பங்கும் இல்லை என்பது மாபெரும் சூழ்ச்சி. தமிழக மாணவர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட அநீதி. இந்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஆட்டுக்கு தாடியும் நாட்டிற்கு ஆளுநரும் தேவையற்றது என்று அறிஞர் அண்ணா முழக்கத்திற்கு வலுசேர்க்கும் வகையில் தமிழக ஆளுநர் தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், பாரம்பரியம் மிக்க சட்டப்பேரவையும் அவமதித்து வருகிறார். சட்டமன்றத்தை விட்டு வெளியேறிய ஆளுநர், ஒரு நாள் தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றப்படுகின்ற காலம் வரும்.

MUST READ