ஈரோடு வ.உ.சி பூங்காவில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் காணும் பொங்கல் விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஆடல்-பாடலுடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்…
தைப்பொங்கலின் நிறைவாக காணும் பொங்கல் விழா சுற்றுலா தளங்களிலும் பொழுதுபோக்கு மையங்களிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஈரோடு நகரின் ஒரே பொழுதுபோக்கு மையமாக உள்ள வ உ சி பூங்காவில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஈரோடு நகரின் மையப் பகுதியில் உள்ள வ உ சி பூங்காவில் ஆண்டுதோறும் காணும் பொங்கலுக்கு பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவது வழக்கம். பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அனுமதிக்கப்படுவர்.
இதன்படி இந்த ஆண்டு பெண்களின் காணும் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது காலை முதலே தோழிகளுடன் அணி அணியாக வந்த பெண்கள் பூங்காவில் குழுமி திரைப்பட பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை பாரபட்சம் இல்லாமல் வயது வித்தியாசம் இன்றி ஆடி பாடி நடனமாடி அசத்தி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். கல்லூரி மாணவிகள் குழுவாக இணைந்து பல்வேறு விளையாட்டுகளிலும் ஈடுபட்டனர். மேலும் பெண்கள் குழுவாக கோலாட்டம் ஆடியும், தூரிகளில் ஆடியும் களிப்புற்றனர்.
ஆண்டிற்கு ஒரு முறை இது போன்று பெண்கள் மட்டுமே பங்கேற்க கூடிய காணும் பொங்கல் விழாவில் பங்கேற்பது மன மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துவதாக இதில் பங்கேற்ற பெண்கள் தெரிவித்தனர். ஈரோடு நகர் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் இந்த காணும் பொங்கல் விழாவில் உற்சாகமாக பங்கேற்றனர்.
கொடிவேரி அணையில் 300 சவரன் நகையுடன் குளித்த அதிமுக பிரமுகரை அதிரடியாக வெளியேற்றிய போலீசார்