சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களாக சிக்கி இருந்த இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் டிராகன் விண்கலம் மூலம் இன்று பூமிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களின் தினசரி வாழ்வியல் முறை குறித்து சுருக்கமாக காண்போம்.

சர்வதேச விண்வெளி நிலையம் கடந்த 1998ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாகும். இது 109 மீட்டர் நீளத்தில் ஒரு கால்பந்தாட்ட மைதானம் அளவுக்கு அமைந்துள்ளது. பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் இந்த சர்வதேச விண்வெளி நிலையம் நிறுவப்பட்டுள்ளது. மணிக்கு 17,500 மைல் வேகத்தில் பயணிக்கும் இந்த விண்வெளி நிலையம் 90 நிமிடங்களுக்கு ஒருமுறை புவியை சுற்றி வருகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 16 முறை பூமியைச் சுற்றி வருகிறது.
விண்வெளி வீரர்களுக்கு பூஜிய ஈர்ப்பு விசை நிலையில் அதிக நாட்கள் இருக்கும் போது அவர்களது தசை வலிமையும், எலும்பின் அடர்த்தியும் குறையும். மேலும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல நாட்கள் தங்குபவர்களுக்கு உடல் எடை குறைதல், பார்வைத் திறன் பாதிப்பு, நரம்பு மண்டலத்தில் மாற்றம் ஆகியவையும் ஏற்படும். விண்வெளியில் இருக்கும் ஒவ்வொரு மாதமும் விண்வெளி வீரர்கள் 1-2% எலும்பின் அடர்த்தியை இழக்கின்றனர். 6 மாத காலத்தில் சுமார் 10% வரை எலும்பின் அடர்த்தியை இழக்கின்றனர். இது எலும்பு முறிவு ஏற்படுவதற்கான ஆபத்தையும் அதிலிருந்து குணமடைவதற்கான காலம் அதிகமாவதற்கும் வழிவகுக்கிறது. பூமிக்குத் திரும்பிய பின்னர் அவர்களின் எலும்பின் அடர்த்தி இயல்பு நிலைக்குத் திரும்ப சுமார் 4 ஆண்டு காலம் வரை ஆகலாம்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் சத்தான உணவுகள், முழுமையான உறக்கம், உடற்பயிற்சி ஆகியவை மூலம் மட்டுமே தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். விண்வெளி வீரர்களுக்கு 300 வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன. தயாரிக்கப்பட்ட உணவுகள் உறைய வைக்கப்பட்டு, அதிலிருக்கும் நீர் முழுமையாக வெளியேற்றப்படும். இதற்கு காரணம், அதை எளிதாக சேமித்து வைக்கலாம். விண்வெளி வீரர்கள் உணவுகளை மீண்டும் தண்ணீரில் சூடாக்கியோ அல்லது குளிர்வித்தோ உண்ணுவார்கள். தேநீர், காபி, ஆரஞ்சு சாறு மற்றும் ஓட்ஸ் போன்ற தானியங்கள் இந்த முறையில் எடுத்துக் கொள்ளப்படும். நட்ஸ், பிஸ்கெட்டுகள், ஆப்பிள், வாழைப்பழங்கள் போன்றவையும் வீரர்களுக்கு வழங்கப்படும்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில், பூமியில் உள்ளதை போன்ற கழிப்பறை இருக்கை அமைக்கப்பட்டுள்ளன. விண்வெளியில் பூஜிய ஈர்ப்புவிசை இருப்பதால், இருக்கையில் அமரும் முன்பு அதில் இருக்கும் பெல்ட்டுகளை அணிந்துகொள்ள வேண்டும். கழிவுகளை கையாள நீருக்கு பதிலாக காற்று பயன்படுகிறது. கழிவுகள் மிதக்காத வகையில் காற்றினால் உறிஞ்சப்பட்டு சேகரிக்கப்படு நிலையில், பின்னர் அவை விண்கலங்களில் ஏற்றப்பட்டு பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது விடுவிக்கப்படும். வளிமண்டல வெப்பம் கழிவுகளை முழுமையாக எரித்துவிடும். இதே முறையில் சிறுநீரும் உறிஞ்சப்படும் நிலையில், அவை கழிவுநீர் தொட்டியில் சேகரிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக பயன்படுத்தப்படுகிறது. இந்த நீர் பூமியில் கிடைக்கும் குடிநீரை விட மிகவும் சுத்தமானதாகும்.
விண்வெளி நிலையத்தில் தங்கி இருக்கும் வீரர்கள் குளிப்பது என்பது சாத்தியமில்லை. இதனால் திரவ சோப் கொண்ட ஈரமான துண்டைப் பயன்படுத்தி உடலைத் துடைத்துக்கொள்ளலாம். தலைமுடியைக் கழுவ, தண்ணீர் இல்லாமல் வேலை செய்யும் ஷாம்பூவைப் பயன்படுத்தி விட்டு, உலர்ந்த துண்டு கொண்டு துடைக்கலாம். கைகள், முகத்தை சுத்தப்படுத்த திரவ சோப் கொண்ட டிஷ்யூக்கள் அல்லது ஈரமான துண்டு மூலம் துடைக்க வேண்டும்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் பூஜ்ய ஈர்ப்பு விசை நிலவுவதன் காரணமாக, தூங்கும் வீரர்கள் அங்குமிங்கும் மிதந்து சென்று, காயமடையக் கூடிய அபாயம் உள்ளது. இதனை தவிர்க்கும் விதமாக, விண்வெளி வீரர்கள் தங்கள் உடலை, விண்வெளியில் தூங்குவதற்கு என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சிறிய பெட்டிகளிலோ அல்லது பைகளுடன் இணைத்துக்கொண்டோ தூங்குகிறார்கள். விண்வெளி நிலையத்தில் இருப்பவர்கள் ஒரு நாளில் 16 சூரிய உதயங்கள் மற்றும் சூரிய அஸ்தமனங்களைக் காண முடியும்.
விண்வெளி மையத்தில் அதிகளவு உபகரணங்கள் இருப்பதால், குளிரூட்டும் மின் விசிறிகள் மற்றும் இயந்திரங்களின் ஒலி எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். இரைச்சல் காரணமாக தூங்குவதில் சிரமம் ஏற்படாமல் இருக்க விண்வெளி வீரர்கள் கண் கவசங்கள், காது அடைப்பான்களை போன்றவற்றை உபயோகிக்கிறார்கள்.விண்வெளியில் தங்கியுள்ள வீரர்கள் தசை வலிமை மற்றும் எலும்பின் அடர்த்தி குறைவதைத் தடுக்கும் விதமாக, நாள்தோறும் 2 முதல் 2.30 மணி நேரம் உடற்பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். இதற்காக பிரத்யேக உடற்பயிற்சிக் கருவிகளும், டிரெட் மில் மற்றும் சக்கரங்கள் இல்லாத ஒரு உடற்பயிற்சி சைக்கிளும் உள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்தில் பல்வேறு துன்பங்களை கடந்தே, விண்வெளி வீரர்கள் தங்கி பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். விண்வெளி ஆராய்ச்சி மனித குல வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என்பதால் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தொடர்ந்து விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.