சென்னை தேனாம்பேட்டையில் நள்ளிரவு இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மெக்கானிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போதையில் வாகனம் ஓட்டிய நபர் எலும்பு முறிவுடன் உயிர்தப்பினார். விபத்தில் சிக்கிய மெக்கானிக் ஹெல்மெட் அணிந்து இருந்தால் உயிரிழப்பை தவிர்த்து இருக்கலாம் என்று காவல் துறையினா் தெரிவித்தனர்.சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் அழகேசன்(24). பைக் மெக்கானிக்கான இவர் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பணி முடிந்து வீட்டிற்கு தனது பைக்கில் திரும்பி கொண்டிருந்தார். பைக் தேனாம்பேட்டை நரசிம்மன் சாலையில் வரும் போது, எதிர் திசையில் ஒருவழிப்பாதையில் அதிவேகமாக வந்த பைக் ஒன்று எதிர்பாராத விதமாக அழகேசன் வந்த பைக் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் மெக்கானிக் அழகேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சுயநினைவு இழந்தார்.
எதிர் திசையில் பைக்கில் வந்த நபர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதை கண்ட சாலையில் இருந்தவர்கள் உடனே 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் இருவரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு ஆய்வு செய்த டாக்டர்கள் அழகேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் எலும்பு முறிவு ஏற்பட்ட நபர் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார விசாரணை நடத்திய போது, மதுபோதையில் ஒரு வழிப்பாதையில் வந்து விபத்து ஏற்படுத்திய நபர் சரவணன் (36) என்று தெரிய வந்தது. இவர் குடிபோதையில் தனது பைக்கை அதிவேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியது விசாரணையில் தெரிய வந்தது. அதைதொடர்ந்து சரவணன் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

விபத்து எற்படுத்திய பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. விபத்தில் சிக்கிய இருவரும் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை இயக்கி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும், ஹெல்மெட் அணிந்து இருந்தால் பைக் மெக்கானிக் தலையில் காயம் ஏற்பட்டு இறந்து இருக்கமாட்டார் என்றும் துறையினா் தெரிவித்தனர். சைதாப்பேட்டையில் நடந்த இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.