திருப்பூர் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வடமாநில இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திருப்பூர், கே.வி.ஆர் நகர் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி நேற்று மாலை கழிவரைக்கு சென்றுள்ளார். அப்போது கழிவறையை சுத்தம் செய்து கொண்டிருந்த அசாம் மாநில வாலிபர் ஒருவர், அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, தனது வகுப்பாசிரியரிடம் கூறியுள்ளார். எனினும் அந்த ஆசிரியர் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை வீட்டிற்கு திரும்பிய சிறுமி, தனது தாயிடம் பிறப்புருப்பில் வழி ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் பள்ளியில் நடந்த சம்பவத்தையும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சிக்குள்ளா சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவரை கைதுசெய்யக்கோரி முழக்கங்களை எழுப்பினர். தகவலறிந்த கே.வி.ஆர் நகர் சரக உதவி ஆணையர் ஜான் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய அசாமை சேர்ந்த ஜெய் (27) என்பவரை திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஒன்றாம் வகுப்பு சிறுமியை வடமாநில வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.