தேர்தல் ஆணையம் கடந்த 15 ஆண்டுகால தேர்தல் டிஜிட்டல் தரவுகளையும், சிசிடிவி காட்சிகளையும் வழங்க வேண்டும். அப்படி தரவில்லை என்றால் எதிர்வரும் பீகார் மாநில தேர்தலை புறக்கணிப்பதாக இந்தியா கூட்டணி கட்சிகள் அறிவிக்க வேண்டும் என்று தோழர் மருதையன் வலியுறுத்தி உள்ளார்.

தேர்தல் ஆணைய உதவியோடு பாஜக 2024 மக்களவை தேர்தலில் வாக்குகளை திருடியதாக ராகுல்காந்தி வைத்துள்ள குற்றச்சாட்டின் தீவிரம் குறித்தும், அடுத்தக்கட்டமாக எதிர்க்கட்சிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பெங்களூரு மத்திய தொகுதிக்கு உட்பட்ட மகாதேவபுரா தொகுதியில் உள்ள வாக்காளர் விவரங்களை காங்கிரஸ் நடத்திய ஆய்வில் ஒரு லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ராகுல்காந்தி இந்த மோசடிகளை தரவுகளுடன் எடுத்துக்காட்டி உள்ளார். இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எந்த காலத்திலும், எந்த கட்சியாலும் சொல்லப்பட்டதில்லை. அவசர நிலைக்கு பிறகு, நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்திரா காந்தி, அவரது மகன் சஞ்சய் காந்தி போன்றவர்கள் தோற்றனர். ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. மொத்த அரசு இயந்திரத்தையும் கையில் வைத்துக்கொண்டு மிகக்கொடூரமான முறையில் எதிர்க்கட்சிகளை ஒடுக்கிய இந்திரா காந்தி, தான் நடத்திய பொதுத்தேர்தலில் தில்லு முல்லு செய்வதாக இருந்தால் செய்திருக்கலாம். ஆனால் அப்படி அவர் செய்யவில்லை. தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். ஆனால் தற்போது தேர்தலில் வாக்குகளை திருடிவிட்டதாக குற்றச்சாட்டு எழுகிறது.
ராகுல்காந்தி பெங்களுரில் நடத்திய பேரணியின் தலைப்பு எங்கள் ஓட்டு, எங்கள் உரிமை என்பதாகும். ஒரு முக்கியமான பிரச்சினையை ஆதாரங்களுடன் வெளியிடுகிறபோது, அனைத்து நாளிதழ்கள், ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வரும். பிரதமர் மோடி, தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட வேண்டும். ஊடகங்கள் அதனை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இந்த செய்தி தலைப்பு செய்தியாக இந்தியாவில் வந்தது ஆங்கில இந்து நாளிதழில் மட்டும்தான். மாறாக அனைத்து ஊடகங்களும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் விதித்த வரி குறித்துதான். தேர்தலில் நடைபெற்ற மோசடி என்பது தேர்தல் ஆணையம், பிரதமர் மோடி, பாஜக மட்டும் செய்தது அல்ல. ஊடகங்களும் சேர்ந்துதான் இந்த முறைகேட்டை மூடி மறைக்கின்றனர். இந்த மோசடி என்பது தேர்தல் ஆணையமும், மோடி அரசும் கூட்டாக சேர்ந்து செய்ததாகும். குறைந்தபட்சம் இதுபோன்று 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் மோசடி நடைபெற்று இருந்தாலும் கூட, மோடி இன்றைக்கு பிரதமராக ஆகி இருக்க முடியாது. அப்படி மோசடி நடைபெற்றுள்ளது. இதில் தேர்தல் ஆணையமும், மோடி அரசும் கூட்டு என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் ராகுலின் குற்றச்சாட்டுகளை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். அப்படி அவர் சொல்வது உண்மை இல்லை என்றால், ராகுல்காந்திக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும் என்று மிரட்டல் விடுக்கிறது. தேர்தல் ஆணையத்தின் கருத்துக்கு பதில் அளித்த ராகுல்காந்தி, “நான் ஒரு எதிர்க்கட்சித் தலைவர். ஒரு அரசியல்வாதி. நான் பொதுமேடையில் தரவுகளுடன் சொல்கிறேன். இதுவே பிரமாண பத்திரம்தான். தேர்தல் ஆணையம் யோக்கியமானதாக இருந்ததால், நான் சொல்வது பொய். தரவுகள் பொய் என்று சொல்ல வேண்டும். மாறாக அவர்கள் என்னை மிரட்டுகிறார்கள். என்னுடைய கருத்துக்கள் பொய் என்று சொல்கிற தைரியம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை, என்று குற்றம்சாட்டுகிறார். இதனை தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தில் உள்ள தரவுகள் முடக்கப்படுகிறது.
தற்போது போலி வாக்காளர்களை சேர்க்கும் முறையை எதிர்க்கட்சிகள் கண்டுபிடித்து விட்டதால், பாஜகவுக்கு யார் வாக்களிக்க மாட்டார்களோ அவர்களை எல்லாம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குகிறது. பீகாரில் SIR என்கிற பெயரில் இதை மேற்கொண்டு வருகிறார்கள். அங்கு 65 லட்சம் வாக்காளர்களை நீக்கிவிட்டனர். பீகாரில் மிகப்பெரிய அளவில் இஸ்லாமிய வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாக நாளேடுகள் தெரிவித்துள்ளன. இஸ்லாமியர்களையும், தலித்துகளையும், புலம்பெயர் தொழிலாளர்களையும் நீக்குவதன் மூலம் தேர்தலில் வெற்றி பெறுவதுதான் பாஜவின் திட்டமாக இருக்கிறது என்று ராகுல்காந்தி சொல்கிறார். அந்த கூற்றில் நிச்சயமாக உண்மை உள்ளது.
கடந்த 2024 மக்களவை தேர்தலின்போது, மொத்த வாக்காளர்களை விட 4.65 கோடி வாக்காளர்கள் கூடுதலாக வாக்களித்து உள்ளனர். இதுதொடர்பாக முன்னாள் ஐஏஎஸ், பேராசிரியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்தனர். ஆனால் அவர்களை தேர்தல் ஆணைய வளாகத்திற்கு உள்ளேயே வரக்கூடாது என்று தடுத்து நிறுத்திவிட்டனர். தேர்தல் ஆணையத்தின் தரவுகள் அடிப்படையில் ஆய்வுசெய்தபோது மொத்த வாக்காளர்களை விட 6 சதவீதம் வாக்குகள் கூடுதலாக பதிவாகி இருந்தது. அது எப்படி பதிவாகியது என்றால், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணிக்குள் இந்த அதிகரிப்பு நடைபெற்றுள்ளது. இப்படி வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பே இல்லை என்று முன்னாள் தேர்தல் ஆணையர்கள் எஸ்.ஒய். குரேஷி, லவாசா போன்றவர்கள் கூறுகிறார்கள்.
2024 மக்களவை தேர்தலில் 11 நாட்கள் கழித்துதான் மொத்த வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வாக்குப்பதிவு நிறைவின்போது சொல்லப்பட்ட வாக்கு சதவீதத்தை விட அது 6 சதவீதம் வாக்குப்பதிவு கூடுதலாக இருந்தது. அப்போது இதில் மோசடி நடைபெற்றுள்ளது என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. அதனால் வாக்குப்பதிவு நிலவரம் தொடர்பான விவரங்களை வழங்கிடுமாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்தியா கூட்டணி தலைவர்கள் கேட்டனர். ஆனால் தேர்தல் ஆணையம் வழங்கவில்லை. அரியானா உயர்நீதிமன்றத்தில் தேர்தல் விவரங்கள் மற்றும் வாக்குப்பதிவு சிசிடிவி காட்சிகளை வழங்கிட கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த தீர்ப்பு வெளியான உடனே, தேர்தல் ஆணையம் சட்டங்களை திருத்தி தரவுகள், சிசிடிவி காட்சிகளை யாருக்கும் தரக்கூடாது என்று சொல்கிறார்கள். அதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. ஹரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் – பாஜக இடையிலான வாக்கு சதவீதம் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இருந்தது. மகாராஷ்டிரா தேர்தலில் மாலை 5-7 மணிக்குள் 10 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருக்கிறது. ஒரு கோடி வாக்குகள் அதிகமாக பதிவாகி உள்ளது. அப்போது அங்கே மோசடி நடைபெற்றுள்ளது ஐயம் இன்றி உறுதியாகிறது. மத்திய பிரதேச தேர்தலிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.
2024 மக்களவை தேர்தல் வடமாநிலங்களில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றன. இப்படி நடைபெறுவது எதற்காக என்றால் கள்ள ஓட்டு போடுவதற்காகவும், போலி வாக்காளர்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்காக தான் நடைபெறுகிறது. வெறுமனே மோடி பிரச்சாரத்திற்காக மட்டும் அல்ல. இதற்காகவும் தான் நடைபெற்றுள்ளது. 2024 மக்களவை தேர்தலில் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு முடிந்த உடன் மொத்த வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. பின்னர் வாக்கு எண்ணிக்கையின்போது இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற தொகுதிகளில் பெரும்பாலனவற்றில் பாஜக மட்டுமே வென்றது. அப்போது தேர்தல் வெற்றி என்பது திருடப்பட்ட வெற்றி தான். திருடப்பட்ட மக்கள் தீர்ப்பின் அடிப்படையில் தான் மோடி இன்றைக்கு பிரதமராக உள்ளார்.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் ஒட்டுமொத்த 79 தொகுதிகளில் பாஜக இப்படி ஒரு வெற்றியை பெற்றிருப்பது மோசடி என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் தெரிவிக்கிறார். இதன் அடிப்படையில் பார்த்தால் 213 தொகுதிகளில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி, 316 தொகுதியில் இந்தியா கூட்டணி வெற்றி என்றுதான் முடிவுகள் இருந்திருக்க வேண்டும். மற்ற கட்டங்களில் நடந்த மோசடிகள் கணக்கிடப்படவில்லை. இப்படி இந்த தேர்தல் திருடப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. மகாதேவபுரா தொகுதி மட்டுமின்றி நாடு முழுவதும் வெற்றி திருடப்பட்டிருக்கிறது. இதேபோல்தான் 2019 தேர்தலும் திருடப்பட்டதுதான். அதனால் ராகுல்காந்தி 2014 ஆண்டு முதல் உள்ள தேர்தல் ஆணைய டிஜிட்டல் தரவுகள் அனைத்தும் தங்களுக்கு தர வேண்டும். சிசிடிவி காட்சிகளையும் வழங்கிட வேண்டும் என்று சொல்கிறார். அப்படி தராவிட்டால் மோசடி நடைபெற்றுள்ளது என்பது உண்மை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி உள்ளார்.
இந்த முறைகேடு என்பது தேர்தல் ஆணையம் செய்தது மட்டும் கிடையாது. 2024 மக்களவை தேர்தலின்போது விவிபேட் இயந்திரத்தில் பதிவாகிய வாக்குகளை எண்ணக் கோரியபோது தலைமை நீதிபதி சந்திரசூட் விடுமுறை கால அமர்வு என்று சென்றுவிட்டார். இன்றைக்கு SIR தொடர்பாக வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு ஆதரவாகவே போய் கொண்டிருக்கிறது. இன்றைக்கு காங்கிரஸ் நடத்தியிருக்கும் பேரணி மிக முக்கியமான அரசியல் நடவடிக்கை. பீகாரில் தேஜஸ்வி யாதவ், தாங்கள் தேர்தலை புறக்கணிக்க நேரிடலாம் என்று சொல்கிறார்கள். இந்த நாட்டில் தேர்தல் ஜனநாயகம் என்பது கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது. தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை, சிபிஐ, ஊடகங்கள் என அனைத்து நிறுவனங்களும் சேர்ந்து இந்த நாட்டின் ஜனநாயகத்தை புதை குழிக்கு அனுப்பி கொண்டிருக்கிறார்கள்.
SIR தொடர்பான வழக்கு வரும் 12ஆம் தேதி விசாரணைக்கு வரும் முன்னதாக 15 ஆண்டுகால தேர்தல் டிஜிட்டல் தரவுகள் மற்றும் சிசிடிவி காட்சிகளை தர வேண்டும். அப்படி தராவிட்டால் பீகார் தேர்தலை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்று அறிவிக்க வேண்டும். இந்தியாவில் தேர்தல் ஜனநாயகம் செத்துவிட்டது. எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்து, வீதிக்கு வந்து போராட வேண்டும். தேர்தல் புறக்கணிப்பின் மூலம் மிகப்பெரிய விழிப்புணர்வு இந்திய மக்களுக்கு வரும். இதை இப்படியே அனுமதித்தால் ரஷ்யாவில் புடின், ஹங்கேரியில் ஆர்பேன் நடத்துவது 20 – 25 வருடங்களுக்கு போலியான தேர்தல் நடக்கும். வாக்குரிமை என்ற ஒன்று இருப்பதையே மக்கள் மறக்க வேண்டி வரும் அதை தடுக்க ஒரே வழி டிஜிட்டல் டேட்டாவை வெளியிடுவது, சிசிடிவி காட்சிகளை தர வேண்டும் என்பதுதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.