எங்கள் கருத்துகளை ஏற்கும் மனநிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, அதிமுகவில் கிளை செயலாளராக எனது கட்சி பணியை தொடங்கினேன். 1972- ல் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோதே எங்கள் ஊரில் கிளைக்கழகத்தை தொடங்கினோம். 1975ல் பொதுக்குழுவை நடத்துவதற்கான குழுவில் என்னை பொருளாளராக நியமித்தனர். 1977ல் சத்தியமங்கலம் தொகுதியில் என்னை போட்டியிடுமாறு எம்ஜிஆர் அறிவுறுத்தினார். எம்ஜிஆருக்கு பிறகு கட்சியை வழிநடத்தும் திறமை ஜெயலலிதாவுக்கே உண்டு என்று தலைவர்களுடன் நானும் சென்று வேண்டுகோள் விடுத்தேன். அதிமுக உடைந்துவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளேன்.
“அதிமுகவை விட்டு வெளியே சென்றவர்களை இணைக்க வேண்டும் என பழனிசாமியிடம் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தினோம். வெளியே சென்றவர்கள் எந்த நிபந்தனையும் இல்லை; எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர். அதிமுக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதற்காக அதிமுக மூத்த தலைவர்கள் 6 பேர் எடப்பாடியிடம் பேசினோம். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால்தான் வெற்றி கிடைக்கும். பிரிந்தவர்களை சேர்க்காவிட்டால், கட்சி ஒன்றிணைய வேண்டும் என்று விரும்புவர்கள் சேர்ந்து அதை செய்வோம் என அவர் கூறினார். மேலும், செங்கோட்டையன் பிரிந்தவர்களை இணைக்க 10 நாட்கள் காலக்கெடு விதித்துள்ளார்.
