spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரை அதிமுகவில் 5வது முனையாகும் செங்கோட்டையன்? திமுகவுக்கு மிகப்பெரிய லாபம்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

 அதிமுகவில் 5வது முனையாகும் செங்கோட்டையன்? திமுகவுக்கு மிகப்பெரிய லாபம்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

-

- Advertisement -

அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் இணைப்பு என்பது 2026 தேர்தலுக்கு பின்னரே சாத்தியமாகும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

shyam
மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம்

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு மற்றும் அவர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்து இருப்பதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றாக சேர வேண்டும் என்பது தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிற விஷயமாகும். 2021 தேர்தல் கால கட்டத்திலும் சொல்லப்பட்ட விஷயம்தான். உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் பலரும் சொல்லி இருக்கின்றனர். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். செங்கோட்டையனின் பேச்சில் புதிதாக இல்லை. எடப்பாடி பழனிசாமி, அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

we-r-hiring

அப்படியான சூழலில் செங்கோட்டையனுடைய இந்த மனம் திறந்த பேச்சு என்ன உணர்த்துகிறது என்றால்? செங்கோட்டையன் ஒரு முடிவு எடுத்து விட்டார். அந்த முடிவை அவராக எடுப்பதைவிட, எடப்பாடி பழனிசாமி எதாவது நடவடிக்கை எடுத்து, அதன் மூலமாக விளைந்த முடிவாக இருந்தால் அவருக்கு மகிழ்ச்சியாக இருக்கும். காரணம் அவர் அதிமுகவின் சீனியர். செங்கோட்டையன் சொன்ன பல நிகழ்ச்சிகள் நானே நேரடியாக பார்த்தவை தான். அதிமுகவுக்கு அனைத்து இந்திய என்கிற அடைமொழியை சேர்க்கிற அந்த பொதுக்குழுவுக்கு நான் தான் பொருளாளராக இருந்தேன் என்று செங்கோட்டையன் சொல்கிறார்.

செங்கோட்டையன் சொல்வது எல்லாமே உண்மைதான். ஆனால் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க 6 அமைச்சர்கள் சென்றார்கள். அவர்களில் செங்கோட்டையன் மட்டுமே வெளியில் வந்து பேசுகிறார். மற்றவர்கள் 5 பேரும் எதுவுமே சொல்லவில்லை. அப்போது அவர்கள் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்றுதானே அர்த்தம். கூட்டணியின் மற்றொரு பெரிய பங்குதாரரான பாஜக அவர்களும் எந்த விதமான கருத்தையும் சொல்லவில்லை. அமித்ஷா சொல்லி கேட்காதவர்கள், செங்கோட்டையன் சொல்லி கேட்பார்களா? அதற்கான வாய்ப்பு இல்லை. பிரிந்து சென்றவர்களை 10 நாட்களுக்குள் சேர்க்காவிட்டால், பிரிந்து சென்ற தலைவர்களை சேர்க்கும் பணிகளை தாங்களே தொடங்குவோம் என்று சொல்கிறார்.

பிரபல தலைவர்கள் மட்டுமின்றி உள்ளூர் அளவிலும் பல தலைவர்கள் விலகி நிற்கிறார்கள். அவர்களை எல்லாம் ஒன்று சேர்க்கிற முயற்சிதான் இது என்று நினைக்கிறேன். 10 நாட்களுக்கு பிறகு செங்கோட்டையன், ஓபிஎஸ் ஆகியோர் இந்த முயற்சியில் ஈடுபடுவார்கள். அப்போது, இது இன்னொரு போட்டி அதிமுகவாக தான் உருவெடுக்கும். காரணம் அதிமுக வாக்கு வங்கி அவர்களால் உருவாவதுதான். தொண்டர்களால் உருவான இயக்கம் அதிமுக என ஓபிஎஸ் சொல்வது உண்மைதான். தொண்டர்கள்தான் அதிமுகவின் உயிர்நாடி. அப்போது அந்த பிளவு ஐந்தாவது முனையாகவே அமையும். அதிமுகவில் ஏற்கனவே 4 முனைகள் தெரிகிறது. இன்னொரு பிளவு ஏற்பட்டால் அது 5 முனை. அப்படி 5 முனை போட்டி ஏற்பட்டால், அது ஆளுங்கட்சிக்கு தான் பெரிய லாபமாக இருக்கும். செங்கோட்டையனுக்கும் அது தெரியுமே. அப்போது இன்றைய செங்கோட்டையனுடைய பேச்சு யாருக்கு லாபத்தை கொடுக்கக்கூடியது?

தொடரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்குமா திமுக அரசு - எடிப்பாடி பழனிச்சாமி கேள்வி?

அதிமுகவுக்கு, அனைத்து இந்தியா என்கிற பெயர் வைக்கும் பொதுக்குழுவில் அதற்கு புலவர் இந்திரகுமாரி, கோவை செழியன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் இருவரும் கட்சியில் இருந்து விலக்கப்பட்டனர். பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்டனர். செங்கோட்டையன் கூறுவது என்ன? அதிமுகவில் இருந்து பிரிந்துசென்ற எஸ்.டி.எஸ்-ஐ எம்ஜிஆர் சேர்த்தார்கள். காளிமுத்துவை ஜெயலலிதா சேர்த்தார்கள் என்று சொல்கிறார். அது சரிதான். அது தலைவர்கள் தங்களை நிரூபித்த பிறகு அந்த முடிவை எடுப்பார்கள். ஜெயலலிதா 1988, 89 கால கட்டத்தில் எடுத்த முடிவை 1991ல் மாற்றிக் கொண்டார். ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட பலரும் பிரிந்து சென்றார்கள். மிகப்பெரிய எதிர்ப்பாளரான ஆர்.எம்.வீரப்பன், ஜானகி அம்மாளுடன் சேர்ந்துதான் பணியாற்றினார். பண்ருட்டியார், பி.ஹெச். பாண்டியன் போன்றவர்களும் அப்படிதான் இருந்தார்கள். எல்லோரையும், ஜெயலலிதா பின்னர் சேர்த்துக் கொண்டார். எப்போது என்றால்? 1991 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு பிறகுதான் அவர்களை அதிமுகவில் சேர்த்துக்கொண்டார்.

admk

ஒரு தேர்தல் வெற்றிதான் பல விஷயங்களை முடிவு செய்யும். 1996ல் திருநாவுக்கரசு பெரிய அளவில் போர்க்கொடி தூக்கினார். 1998 வரை அந்த வழக்கு நடைபெற்றது. நீதிபதி பி.டி.தினகரன் வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா பக்கம் தீர்ப்பாகியது. 1998ல் தேர்தல் வந்தது. அந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 30 இடங்களில் வெற்றி பெற்றது. அதற்கு பிறகு இந்த பிரச்சினைகள் எல்லாம் மறைந்தன. அதேபோல் 2026 தேர்தலுக்கு பிறகுதான் இந்த முடிவுகள் வரும் என்பதுதான் என்னுடைய யூகம். அதுவரை அதிமுக ஒன்றாக வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருக்கலாம்.  அல்லது இதுபோன்ற சில முயற்சிகளையும் செய்யலாம். அது  மீண்டும் 2026 திமுக ஆட்சியை நோக்கி போகும். 2026 தேர்தலுக்கு பிறகு ஒரு விழிப்புணர்வு ஏற்படலாம். எடப்பாடி பழனிசாமி இறங்கி வருவார். ஏனென்றால் இப்போதே அவருக்கு வழிப்புணர்வு உள்ளது.

அதிமுக ஒற்றுமைக்கான அனைத்து வாய்ப்புகளையும் எடப்பாடி பழனிசாமி ஒத்திவைத்துள்ளார். காரணம் அவருக்கும் தேர்தல் வெற்றி மிகவும் முக்கியம் என்று நினைக்கிறார். பாஜக உடன் கூட்டணி வைக்க அந்த கட்சி அழுத்தம் கொடுத்தது. கடந்த மார்ச் மாதம் செங்கோட்டையன் டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்களை சென்று பார்த்தார். ஆனால் ஏப்ரல் மாதம் அமித்ஷா எடுத்த வியூகம் என்பது, எடப்பாடி பழனிசாமிதான் சிறந்த வாய்ப்பாக இருந்துள்ளார். அதனால்தான் அந்த கூட்டணிக்கு ஒத்துக்கொண்டு போனார். தற்போது அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் குறித்து பாஜக தலைவர்கள் யாரும் பேசுவது இல்லை. உட்கட்சி விவகாரம் என்று ஒதுங்கி விடுகிறார்கள். அதற்கு காரணம் இன்றைய தேதிக்கு அதுதான் சிறந்தது என்று நினைக்கிறார்கள். மற்றவர்கள் சேர்ந்தால் சேரட்டும். சேராவிட்டாலும் பராவியில்லை. நாம் கூட்டணிக்கு புதிய கட்சிகளை சேர்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.

டிடிவி தினகரன்

அப்படி ஒரு நிலைமை வந்ததால் தான் டிடிவி தினகரனும், என்டிஏ கூட்டணியில் இருந்து விலகினார். அவர்களுக்கு இருக்கும் மாற்று வாய்ப்பு, விஜய் கட்சியில் சேர்வதாகும். செங்கோட்டையனின் பின்னால் இருப்பவர்கள் தேர்தல் அரசியலில் எம்எல்ஏ, கவுன்சிலர் ஆக வேண்டும் என்கிற முனைப்பில் இருப்பவர்கள்தான். பதவி இல்லாமல் எந்த அரசியல்வாதியும் ஜீவிக்கவே முடியாது. அதற்கு என்ன வாய்ப்பு உள்ளது. நமது ஊரில் நமக்கு இவ்வளவு வாக்குகள் இருக்கிறது. விஜய் கட்சி சேர்ந்தால் வெற்றி. எல்லோருக்கும் இதுபோன்ற தொகுதி சார்ந்த அணுகுமுறை இருக்கும். செங்கோட்டையன், டிடிவி தினகரனுக்கும் இந்த அணுகுமுறை இருக்கும். எனவே 2026 தேர்தல் தான் அதை முடிவு செய்யும் என்று நான் நினைக்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ