spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுடெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்… கட்டமைப்பு வசதிகள் எப்போது தான் சாத்தியமாகும்?...

டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்… கட்டமைப்பு வசதிகள் எப்போது தான் சாத்தியமாகும்? – அன்புமணி கேள்வி

-

- Advertisement -

காவிரி டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: கட்டமைப்பு வசதிகள் எப்போது தான் சாத்தியமாகும்? என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்… கட்டமைப்பு வசதிகள் எப்போது தான் சாத்தியமாகும்? - அன்புமணி கேள்விமேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில, ”தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் உழவர்கள் அறுவடை செய்து, கொண்டு வந்த 4 லட்சத்துக்கும் கூடுதலான நெல் மூட்டைகள் 10 நாள்களுக்கும் மேலாக கொள்முதல் செய்யப்படாமல்  தேங்கிக் கிடக்கின்றன. இவை தவிர அரசால் கொள்முதல் செய்யப்பட்ட 15 லட்சத்திற்கும் கூடுதலான நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாமல் தேங்கிக் கிடப்பதால் கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், நிலைமையை சரி செய்ய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த காலங்களில் இல்லாத வகையில் நடப்பாண்டில் 6.10 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. வழக்கத்தை விட நடப்பாண்டில் முன்கூட்டியே குறுவை அறுவடை தொடங்கியுள்ளது; அதை கருத்தில் கொண்டு நெல் கொள்முதலும் வழக்கத்தை விட ஒரு மாதம் முன்பாக கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்தே தொடங்கப்பட்டது. ஆனால், விவசாயிகளால் கொண்டு வரப்படும் நெல் மூட்டைகளில் 25% கூட கொள்முதல் செய்யப்படாதது தான் 4 லட்சம் மூட்டைகள் தேங்குவதற்கு காரணமாகும்.

we-r-hiring

தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தலா ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகளும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் தலா 50 ஆயிரம் மூட்டைகளும் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இதற்குக் காரணம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை பாதுகாத்து வைப்பதற்கு நேரடி கொள்முதல்  நிலையங்களில் போதிய இட வசதி இல்லாததும், போதிய எண்ணிக்கையில் கிடங்கு உள்ளிட்ட கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படாததும் தான். அதனால், விவசாயிகள் கொண்டு வந்த 4 லட்சம் நெல் மூட்டைகள் மட்டுமின்றி, அரசால் கொள்முதல் செய்யப்பட்ட 15 லட்சத்திற்கும் கூடுதலான நெல் மூட்டைகளும் திறந்த வெளிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே, கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளையே வைத்திருப்பதற்கு இடம் இல்லாததால் பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் நிலையங்களில் ஒவ்வொரு நாளும் 40 கிலோ எடை கொண்ட 1000 மூட்டைகள், அதாவது 40 டன் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், அதை விட பல மடங்கு நெல் உழவர்களால் கொண்டு வரப்படுகிறது. உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் இரு நாள்களுக்கு ஒரு முறையாவது அரவை ஆலைகளுக்கோ, கிடங்குகளுக்கோ கொண்டு செல்லப்பட்டால் தான் ஒவ்வொரு நாளும் 40 டன் நெல்லையாவது கொள்முதல் செய்ய முடியும். அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்டாலும் கூட  ஒரு வாரத்தில் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 5ஆயிரம் நெல் மூட்டைகள் வரை தேங்கிக் கிடக்கும்.

ஆனால், ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் குறித்த காலத்தில் அப்புறப்படுத்தப்படாதது  நிலைமை இந்த அளவுக்கு மோசமடைவதற்கு காரணம் ஆகும். கொள்முதல் செய்து வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகள் அனைத்தும் உடனடியாக கிடங்குகளுக்கோ, அரவை ஆலைகளுக்கோ கொண்டு செல்லப்பட்டு, கொள்முதல் நிலையங்களுக்கு புதிதாக நெல் மூட்டைகள் வரவில்லை என்றாலும் கூட, இப்போது தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு ஒரு வாரம் முதல் 10 நாள்கள் வரை ஆகும். புதிதாக நெல் மூட்டைகள் கொள்முதலுக்காக கொண்டு வரப்பட்டால் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லும். ஏற்கெனவே கடந்த சில நாள்களாக பெய்த மழையில் பல ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்துள்ள நிலையில், அடுத்து வரும் நாள்களில் பெரிய அளவில் மழை பெய்தால் நெல்லுக்கு ஏற்படும் பாதிப்பும், உழவர்களுக்கு ஏற்படும் இழப்பும் மதிப்பிட முடியாதவையாகும்.

காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் எவ்வளவு மோசமான நிலையில் உள்ளன என்பதை கடந்த மாதம் 20-ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை நேரில் ஆய்வு செய்த போது அறிந்து கொண்டேன். தமிழ்நாட்டில் உள்ள எந்த நெல் கொள்முதல் நிலையத்திலும் அடிப்படை வசதிகள் இல்லை. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் கிடங்குகள் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை சேமித்து வைக்க போதுமானவையாகவும் இல்லை.

தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திடம்  மொத்தம் 382 கிடங்குகள் உள்ளன. அவற்றில் 18.22 லட்சம் டன் நெல் மூட்டைகளை மட்டும் தான் சேமித்து வைக்க முடியும். எந்த ஒரு குறிப்பிட்ட நாளிலும் 30 லட்சம் டன் முதல் 35 லட்சம் டன் வரையிலான நெல் அரிசியை இருப்பு  வைக்க வேண்டும் என்பதால் இப்போது இருக்கும் கிடங்குகள் போதுமானவை அல்ல. அதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் உழவர்கள் அரும்பாடுபட்டு உற்பத்தி செய்யும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாழாகின்றன.

ஆனால், இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகள் குறித்து ஆட்சியாளர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்பதால் தான் அவர்கள் இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண மறுக்கின்றனர். இப்போது கொள்முதல் செய்யப்படும் அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டால், அவை மழையில் நனையாமல் இருப்பதற்கும், உழவர்களை காக்க வைக்காமல் அவர்கள் கொண்டு வரும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்வதற்கும் அடுத்த இரு ஆண்டுகளில் கிடங்குகளின் எண்ணிக்கை குறைந்தது 700 ஆகவும், கொள்ளளவு 35 லட்சம் டன்னாகவும் அதிகரிக்கப்பட வேண்டும்; ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 250 டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் கட்டப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் உழவர்கள் நலனில் அக்கறை இல்லாத திமுக அரசுக்கு இவற்றின் தேவை குறித்து எந்த புரிதலும் இல்லை.

நெல் கொள்முதலுக்கான ஏற்பாடுகள் குறித்து கடந்த 2-ஆம் தேதி தான் காவிரி பாசன மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்தாய்வு நடத்தினார். நெல் கொள்முதலில் உழவர்களுக்கு எந்த குறையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தினார். ஆனால், அடுத்த சில நாள்களிலேயே 4 லட்சம் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன என்றால், நெல் கொள்முதல் கட்டமைப்பு எந்த அளவுக்கு சீரழித்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். விளம்பரத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டு ஆட்சி நடத்தும் திமுக, இனியாவது உழவர்களின் துயரத்தை புரிந்து கொண்டு தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்; கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று  பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

தொடர் உச்சத்தில் தங்கம்…சவரன் ரூ.90,000த்தை நெருங்கியது…

MUST READ