கரூரில், விஜய் பிரசார வாகனம் வந்த பிறகே, தள்ளு முள்ளு ஏற்பட்டு, கூட்ட நெரிசலால் உயிரிழப்புகள் உண்டானதாக உண்மை கண்டறியும் குழுவின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதி கூட்டு இயக்கம் சார்பில், கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பான உண்மை அறியும் குழுவினர், நேரடியாக கரூர் சென்று, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தனர். அதன்படி, கரூர் மக்களது கருத்துகளின் அடிப்படையில் அறிக்கையை அக்குழுவினர் தயார் செய்துள்ளனர். இதில்,
கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என்ன?

நெரிசல் எப்போது ஏற்பட்டது??
மர்ம நபர்கள் யாரேனும் நொிசலில் ஊடுருவி அசம்பாவிதத்தில் ஈடுபட்டனரா??? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி, அறிக்கை தயார் செய்துள்ளனர். இந்த அறிக்கை,
சென்னை சேப்பாக்கில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில், பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதி கூட்டு இயக்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி வெளியிடப்பட்டது. செய்தியாளர் சந்திப்பில், “அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சரஸ்வதி, கீதா கிறிஸ்டினா, சாமி ஜாக்லின் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்கள் கலந்து கொண்டு, செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், முழுக்க முழுக்க கரூர் துயரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கிய பொதுமக்கள் உயிரிழந்ததாக குறிப்பிட்டனர். விஜயின் பிரசார வாகனம் கூட்டத்துக்கே உள்ளே நுழையும் பொழுதே கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் உண்மை கண்டறியும் குழுவிடம் தெரிவித்துள்ளனர். விஜய் தாமதமாக வந்தது தவறு என்றும் பொதுமக்களின் ரசிக மனப்பான்மையும் நிகழ்விற்கு ஒரு காரணம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் .
கரூரில், விஜய் கூட்டத்தை கூட்ட வேண்டும் எனும் காரணத்தினாலேயே, திட்டமிட்டு, தாமதமாக வந்தது உறுதியாகி உள்ளதாகவும் திமுகவின் முப்பெரும் விழாவிற்கு போட்டியாக டிசம்பரில் நடக்க இருந்த பிரசாரத்தை முன்கூட்டியே செப்டம்பர் மாதம் 27ஆம் தேதியே நடத்தியது தெரிய வந்துள்ளதாகவும் உண்மை கண்டறியும் குழுவினர் கூறினர். மேலும் விஜயை காண வந்தவர்கள் பெரும்பாலானோர் ரசிகர்களே என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும் அக்குழுவினர் அருணா ஜெகதீசன் ஆணையம் இந்த விசாரணையை தொடர வேண்டும் என கோரிக்கை வைத்ததோடு, சிபிஐ விசாரணை நியாயமாக நடக்க வேண்டும் என்றும் உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் உண்மை கண்டறியும் குழுவினர் வலியுறுத்தினாா்.